தெலுங்கில் தாம் நாயகி யாக நடித்துள்ள 'அம்மு' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
இதில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.
இதில் காவல்துறை அதிகாரியான தனது கணவரிடம் இருந்து தப்பிக்கும் இளம் பெண், பின்னர் ஒரு கைதியுடன் இணைகிறார். இதையடுத்து ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையாம்.
"தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சித்திரிப்பது சவாலாக இருந்தது. எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி உள்ளேன். இனி ரசிகர்கள்தான் என் நடிப்பை எடை போட வேண்டும்," என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை அஞ்சலியை அம்மா கதா பாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தில் ராம் சரண் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பா கதாபாத்தி ரத்திற்கு அஞ்சலியும் மகன் கதாபாத்திரத்திற்கு கியாரா அத்வானியும் ஜோடியாக நடிப்பதாகத் தகவல். சங்கர் இயக்கும் முதல் நேரடி தெலுங்குப் படம் இதுவாகும். ஒரே சமயத்தில் தமிழிலும் வெளியிட உள்ளனர்.
உழைப்புக்கேற்ற ஊதியம் முறையாக கைக்கு வந்தாலே போதும் என்கிறார் நடிகர் கார்த்தி. ஒரு வெற்றிக்குப் பிறகு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பதை தாம் பெரிதாகப் பொருட்படுத்தியது இல்லை என்றும் கூறியுள்ளார்.
முதல்முறையாக மலை யாளத்தில் ஒரு படத்துக்கு இசையமைக்க உள்ளார் அனிருத். அவருக்கு கேரளா விலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. எனவே, படம் குறித்த தேதியில் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

