தனுஷுடன் 'நானே வருவேன்' படத்தில் இணைந்து நடித்துள்ளார் எல்லி அவ்ரம். சுவீடனைச் சேர்ந்த இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்திப் படம் மூலம்தான் எல்லி இந்திய திரையுலகில் கால் பதித்தார். இந்தியில் வெளியான 'தேவ்தாஸ்' படம் இவருக்கு மிகவும் பிடித்தமானது.
ஒருமுறை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய படம் சுவீடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அதை எல்லியும் பார்க்க நேர்ந்தது. படத்தைப் பார்த்து முடித்த பிறகு எப்படியாவது இந்திய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
அந்த ஆர்வமும் வேகமும்தான் இந்திப் படத்தில் அறிமுகமாகவும் அதைத் தொடர்ந்து தமிழ் சினிமா வரை பயணம் மேற்கொள்ளவும் அவருக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளன.
"இந்திப் பாடல் ஒன்றில் நடித்தபோதுதான் இந்திய கலாசாரத்துடன் அறிமுகமானேன். அதற்கு கிடைத்த வரவேற்புதான் தென்னிந்திய திரையுலகம் வரை துணிச்சலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வரவழைத்தது.
"தமிழில் முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை சுமந்துள்ளார் எல்லி. மொழி தெரியாத நிலையில் அவர் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
"முதன்முறையாக இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் செல்வராகவன் படத்தின் கதையை என்னிடம் விவரித்தபோதே, இது சவாலான பாத்திரம் என்று தோன்றியது. அதனால் உற்சாகம் அடைந்தேன் என்பதுதான் உண்மை.
"அப்பாவித்தனம், காதல், கோபம், அதிர்ச்சி என்று அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் கண்கள் மூலமாகவே ரசிகர்களுக்கு கடத்துவது அவ்வளவு எளிதல்ல. எனினும் இயக்குநரின் உதவியோடு கச்சிதமாக நடித்து முடித்தேன்.
"நான் ஏற்று நடித்த மாதுரி என்ற அந்தக் கதாபாத்திரம் என்றும் என் நினைவில் நீடித்து நிலைத்திருக்கும். ஏனெனில் இந்தப் படம்தான் கண்களால் மட்டுமே படம் பார்ப்பவர்களைக் கட்டிப்போட முடியும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. என் திறமையை நானே இப்போதுதான் உணர்கிறேன்," என்கிறார் எல்லி.
இந்தியாவில் இருக்கும் வேளையில், சொந்த ஊரில் இருப்பது போன்றுதான் உணரத் தோன்றுவதாகக் குறிப்பிடுபவர், சினிமா வாய்ப்புகளுக்காக மட்டுமல்லாமல், தமது ஆன்மீக தேவைகளுக்காகவும்தான் இந்தியாவில் தங்கியுள்ளதாகச் சொல்கிறார்.
"முந்தைய பிறவியில் நான் இந்திய குடிமகளாகவே இருந்திருக்க வேண்டும். இதை நான் உறுதியாக நம்புகிறேன்.
"இந்திய கலைகள், கலாசாரங்கள் ஆகியவற்றை ஏற்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமோ, நெருடலோ ஏற்படவில்லை. எதுவும் அந்நியமாகத் தெரியவில்லை.
"சென்னைக்கு வந்தபோது, அந்த நகரத்துடனும் தமிழ் மொழியுடனும் எனக்கு ஏற்கெனவே ஒருவிதத் தொடர்பு இருப்பதாகத் தோன்றியது.
"திடீரென என் மனதில் அன்பும் ஆர் வமும் கூடியது. ஆனால் இந்தியில் பேசும்போது அத்தகைய உணர்வும் நெருக்கமும் ஏற்படவில்லை," என்று நெகிழ்கிறார் எல்லி.

