சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்ன மும் ரஜினியும் கைகோக்க உள்ளனர்.
அண்மையில் இருவரும் நேரில் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது மணிரத்னம் கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் கடைசியாக 'தளபதி' படத்தில் இணைந்து பணியாற்றினர். 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு ரஜினி. மணிரத்னம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'பர்ஹானா'. 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' என வித்தியாசமான கதைக் களங்களை ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படம் இது. மிக விரைவில் இப்படத்தை வெளியிட உள்ளனர். மனுஷ்யபுத்திரன் வசனங்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில், நெல்சனின் அடுத்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகியாம். இதுவும் நாயகியை மையப்படுத்தும் படமாக உருவாக இருப்பதாகத் தகவல்.
ஐஸ்வர்யாவின் திறமையும் அர்ப்பணிப்பும்தான் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தூண்டுவதாகச் சொல்கிறார் நெல்சன்.
முதன்முறையாக ஒரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் ஜீவா. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் படத்தில் ஜீவாவை வில்லன் கதாபாத்திரத்தில் பார்க்க முடியும். இதற்கு முன்பு சில படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ஜீவா. இந்நிலையில், தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால்தான் அவர் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால்தான் வில்லனாக நடிக்க ஜீவா முன்வந்ததாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இந்நிலையில், திரிஷாவுக்கு முன்பாகவே இந்த வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம்தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் சில பிரச்சினைகளால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். எனினும் கீர்த்தியின் ரசிகர்கள் விடுவதாக இல்லை. குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து கணினி தொழில் நுட்ப உதவியோடு ஒரு புகைப்படத்தை வெளி யிட்டுள்ளனர். அதில் திரிஷாவுக்குப் பதிலாக கீர்த்தி குந்தவையாக காட்சி அளிக்கிறார். கீர்த்தியும் திரிஷா வும் நெருங்கிய தோழிகளாவர்.

