நகைச்சுவை நடிகர் வடிவேலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.
இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையாக மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவரது கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை போயஸ் கார்டனில் தன் மாமனார் ரஜினிகாந்தின் வீட்டுக்கு அருகிலேயே பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார் தனுஷ். இந்த வீட்டில் கடந்தகால பிரச்சினைகளை எல்லாம் மறந்து, மன்னித்து தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வசிக்க அவர் முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நட்சத்திர தம்பதிகளான தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், தங்களுடைய 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் புதுமனைப் புகுவிழா நடக்கலாம் என சொல்லப்படுவதால் அப்போது, தனது காதல் மனைவியோடு தனுஷ் காலடி எடுத்து வைத்து, தனது முறிந்த உறவை புதுப்பித்துக்கொள்வார் என கோடம்பாக்கத்தில் தகவல்கள் உலாவருகின்றன.
நடிகர் சிம்புவின் நண்பரும் நடிகருமான மஹத் இந்தியில் நடித்துள்ள படம் 'டபுள் எக்ஸ்எல்'. இதில் சோனாக்சி சின்ஹா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் 'தாலி தாலி' என்ற பாடலைப் பாடி பாலி வுட்டில் பாடகராக அறிமுக மாகி உள்ளார் சிம்பு.
இதனைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிம்பு, "எனது நண்பர் மஹத்திற்காக பாலிவுட்டில் அறிமுகமாகி, நான் ஒரு பாடலைப் பாடி உள்ளேன். இப்பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்,'' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழில் 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்னி லியோன், அவரது உச்சரிப்புகள் தெளிவாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு ஆசிரியரை நியமித்து ஆரம்பம் முதலே தமிழ் கற்க பயிற்சி எடுத்து வருகிறார். இப்படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் ஓரளவு தமிழ் பேசும் அளவிற்கு முன்னேறி உள்ளார். அடுத்தடுத்து, நான் நடிக்கப்போகும் தமிழ்ப் படத்தில் அனைவரும் என்னுடன் தமிழில்தான் பேசவேண்டும் என்று நிபந்தனை போடப் போவதாகவும் கூடிய சீக்கிரமே தமிழை சரளமாகப் பேசக்கூடிய அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

