முப்பது நாள்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முத்தான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டதாக பூரிப்போடு சொல்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இவர், விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர்.
அதனைத்தொடர்ந்து தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் வியக்க வைத்தார். பின்னர், படத் தயாரிப்பில் நல்ல லாபம் வரவே, இரண்டாவது படத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் மலையாள நடிகையான இவர் பூங்குழலி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இவருக்கான தனி அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அளவு கடந்த உற்சாகத் துடன் ஐஸ்வர்யா லட்சுமி காணப்படுகிறார்.
"செப்டம்பர் 30ல் வெளியான பொன்னியின் செல்வனில் நான் நடித்து இருந்த பூங்குழலி பாத்திரத்துக்கு எதிர்பாராத வகையில் பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருவது வியப்படைய வைத்துள்ளது.
"தெலுங்கில் நான் நாயகியாக நடித்துள்ள 'அம்மு' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளேன். நவீன் சந்திரா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள 'அம்மு' திரைப்படம் அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ல் வெளியாகிறது
"இந்தப் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
"இதனைத்தொடர்ந்து இம்மாதம் 28ஆம் தேதியன்று 'குமாரி' மலை யாளப்படமும் வெளியாகிறது.
"சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி' படத்தைத் தொடர்ந்து, 'குமாரி' படத்திலும் தயாரிப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். அத்துடன், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்திலும் இதில் நடித்திருக்கிறேன்.
"முப்பது நாள்களில், மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் மனது நிறைவாகவும் பூரிப்பாகவும் உள்ளது," என்றார்.
'குமாரி' திரைப்படம் இதுவரை வெளிவராத புராண இதிகாசக் கதையுடன் தொடர்புடைய திகிலூட்டும் திரைப்படம் என்ற தகவலும் வெளியாகி வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
'பூங்குழலி', 'அம்மு', 'குமாரி' என ஒரே மாதத்தில் மூன்று வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தி யிருக்கும் ஐஸ் வர்யா லட்சுமிக்கு சக கலைஞர்களும் மூன்று மொழித் திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்து வருகிறார்.
'கிறிஸ்டோபர்' எனும் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாகவும் 'கிங் ஆஃப் கோதா' எனும் மலையாளப் படத்தில் முன்னணி நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாகவும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
அத்துடன், ப்ரியா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி
,
:

