அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் புது நாயகிகளில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர்.
மருத்துவர், விமானப் பணிப்பெண், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் எனப் பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் படிப்பை முடித்தவர்களையும் 23 வயதுக்குப் பிறகே திரையில் காண முடிகிறது.
"முன்பெல்லாம் இந்தித் திரையுலகில் இருந்து இளம் நடிகைகளை அழைத்து வந்து தமிழ்ப் படங்களில் நாயகிகளாக நடிக்க வைப்பார்கள். ஒரு காலகட்டத்தில் தமிழிலும்கூட 17 அல்லது 18 வயதுடைய பெண்கள் நாயகிகளாக அறிமுகமாகினர். இவ்விஷயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
"கல்வி என்பது தங்களுக்குப் புகழுடன் நல்ல மதிப்பையும் பாராட்டையும் பெற்றுத் தருகிறது. ஒருவேளை திரையுலகில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாமல் புறக்கணிக்கப்பட்டாலும், படித்த படிப்பு தங்களைக் கைவிடாது என இளம் பெண்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
"சுருக்கமாகச் சொல்வதானால் 'பிடித்ததைச் செய்வோம், அதைப் படித்துவிட்டுச் செய்வோம்' என்பதுதான் இளம் நாயகிகளின் கொள்கையாக உள்ளது," என்று இன்றுள்ள நிலைமையை விவரிக்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
சரி... மேற்குறிப்பிட்டவாறு தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாயகிகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
சிவானி, சிவாத்மிகா
நடிகை சாய் பல்லவி மருத்துவம் படித்தவர் என்பதும் நடிப்பிலும் அவர் சாதித்துக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்த சங்கதி. அவரது வழியைப் பின்பற்றும் இரண்டு இளம் நாயகிகள் சிவானி ராஜசேகர், சிவாத்மிகா ராஜசேகர் குறித்து சிலருக்கு விவரம் தெரிந்திருக்கும்.
'இதுதாண்டா போலீஸ்' படப் புகழ் நடிகரும் மருத்துவருமான ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியரின் செல்ல மகள்களான இருவரும் மருத்துவ மாணவிகள். கவுதம் கார்த்திக் நடிப்பில் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் மூலம் சிவாத்மிகாவும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் 'அன்பறிவு' படம் மூலம் சிவானியும் நடிப்புப் பயணத்தை தொடங்கி உள்ளனர்.
தங்களைப் போன்று மகள்களும் மருத்துவம் படித்து சேவையாற்ற வேண்டும் என்று பெற்றோர் கூறிய அறிவுரையை இரு மகள்களும் சமர்த்தாகப் பின்பற்றுகின்றனர்.
இருவரது நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டிருப்பதில் பெற் றோருக்கு மகிழ்ச்சி. இவ்விரு நாயகிகளும்தான் தமிழ் சினிமாவின் 2022 அறிமுக நாயகிகளின் பயணத்தைத் தொடங்கி வைத்தவர்கள்.
அதிதி சங்கர்
சங்கர் மகள் என்பதால் அதிதிக்கு தொடக்கம் முதலே கோடம்பாக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கார்த்தி நடித்த 'விருமன்' படம் மூலம் அறிமுகமான அதிதியும் மருத்துவம் படித்தவர்தான். கையில் ஒலிபெருக்கியைக் கொடுத்தால்போதும், மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பாராம். நகைச்சுவைகள் (ஜோக்) சொல்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். நடிப்பு மீதான ஆர்வம் காரணமாக நாயகியாகி உள்ளார். தந்தைக்காக படிப்பு, தனக்காக நடிப்பு என்கிறார் அதிதி.
பவித்ரா லட்சுமி
'நாய் சேகர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி. 'மாடலிங்' துறையில் அசத்திக் கொண்டிருந்தவர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டார். விளம்பரம், அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வாங்கி உள்ளாராம். ஆடை வடிவமைப்பு தொடர்பாக படித்துள்ளார். சினிமா தொடர்ந்து கைகொடுக்காவிட்டால், சொந்த நிறுவனம் தொடங்க தயாராக இருப்பதாகத் தகவல்.
பவித்ரா மாரிமுத்து
மலேசியாவைச் சேர்ந்த பவித்ரா மாரிமுத்து மருத்துவராகும் கனவுடன் இந்தியாவுக்கு வந்தவர். அங்குதான் தரமான மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்று பலர் அறிவுறுத்தினராம். மருத்துவரான பிறகு காஸ்மெட்டிக் துறையிலும் பெரிய அளவில் சாதிக்கும் கனவுடன் மேல்படிப்பை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அருள் நிதியின் 'டைரி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, 'பீட்சா 3' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இரு படங்களின் இயக்குநர்களுமே பவித்ரா மாரிமுத்துவை வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
பவ்யா த்ரிகா
சிறு வயது முதல் விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர், பட்டப் படிப்பை முடித்த பிறகு 'கதிர்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். சென்னை கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது சில சினிமா வாய்ப்புகள் தேடிவந்தனவாம். எனினும் பொறுமை காத்து, நல்ல கதையாகத் தேர்வு செய்து நடித்துள்ளார்.
அபர்ணா தாஸ்
'பீஸ்ட்' படத்தின் இன்னொரு நாயகி. அதற்கு முன்பே மலையாள உலகில் 'ஞான் பிரகாசன்' படம் மூலம் அறிமுகமாகிவிட்டார். கோவையில் உள்ள கல்லூரியில் படித்தவர். தமிழ்த் திரையுலகில் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
இவர்களைத் தவிர மேலும் பல இளம் நாயகிகள் பட்டப்படிப்பை முடித்த பிறகு நடிக்க வந்துள்ளனர்.

