இளையர்களுக்குப் பிடித்த நடிகர்களில் ஹரீஷ் கல்யாணும் ஒருவர் என்பதில் சந்தேகம் தேவையில்லை. குறிப்பாக, இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அதிர்ஷ்டசாலி.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, கோடம்பாக்கத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் ஹரீஷ். அவர் நடித்த படங்கள் பெரிய வசூலைப் பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களைக் கவிழ்த்துவிடவில்லை. சுமார் லாபமேனும் கிடைப்பதால், நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், விரைவில் தமக்கு திருமணம் நடக்க இருப்பதாக ஹரீஷ் அறிவித்திருப்பது கோடம்பாக்கத்தினரையும் அவரது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காரணம், 'சாக்லெட் பாய்' கதாபாத்திரங்களில் நடித்து வரும் இளம் நாயகன் என்பதால் காதல் திருமணம்தான் செய்துகொள்வார்கள் எனப் பெரும்பாலானோர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், ஹரீஷ் கல்யாணோ பெற்றோர் பார்த்து நிச்சயித்த பெண்ணை மணக்க உள்ளார்.
"சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக உள்ளேன். திரைப்படங்களில் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்து சிலர் நான் காதலித்து திருமணம் செய்வேன் என்று நினைத்திருக்கலாம்.
"அதேசமயம் என் பெற்றோர் எனக்கு ஏற்ற பெண்ணைத்தான் நிச்சயம் செய்துள்ளனர்," என்று எதிர்வரும் 28ஆம் தேதி தமக்கு மனைவியாக மாறப்போகும் நர்மதாவைக் குறிப்பிடுகிறார் ஹரீஷ்.
நர்மதாவைவிட பொருத்தமான ஒருவர் தமக்கு மனைவியாக அமைய வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடுபவர், புது வாழ்க்கையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
"தனது திருமணத்துக்கான ஏற்பாடுகள் இவ்வளவு துரித கதியில் நடக்கும் எனத் தானே எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்
களைப் போன்றே தானும் வியப்பில் மூழ்கி
உள்ளேன்.
"இன்னும் சில காலம் போகட்டும் என்பதுதான் எனது முடிவாக இருந்தது. ஆனால் அப்பாவும்
அம்மாவும் முடிவெடுத்த பிறகு அதை மாற்ற முடியாது.
"திருமணம் நிச்சயமானதும் நானும் நர்மதாவும் சந்தித்துப் பேசினோம். பல விஷயங்களில் இருவரது விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. சினிமா, இசை, உணவு, பயணம் எனப் பலவற்றில் இருவருமே ஒரே அலைவரிசையில் பயணம் செய்வதை தெரிந்துகொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. நர்மதா எப்போதுமே இயல்பாக இருக்கக்கூடியவர். நான் ஒரு நடிகன் என்பதால் அவர் பதற்றப்படுவதோ, பேசத் தயங்குவதோ இல்லை," என்கிறார் ஹரீஷ்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துள்ள இவரது வருங்கால மனைவி நர்மதா, சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணம் நிச்சயமான கையோடு தன் பெற்றோரிடம் பழகி நர்மதா மிகவும் நெருக்கமானவராக மாறிவிட்டதில்
ஹரீஷுக்கு மிகுந்த ஆச்சரியம்.
"இருவரும் மனம்விட்டுப் பேசிய பின்னர், இணைந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இருவருக்குமே அந்த உணர்வு ஏற்பட்டது என்பதும் முக்கியம்.
"நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில் நமக்காக இன்னொருவர் கவனம் வைக்கும்போது, அவர் மீது பாசமும் மரியாதையும் ஏற்படும். அன்பு என்பது அனைத்து இடங்களிலும் உள்ளது. அதை இயங்க வைப்
பதுதான் முக்கியம். நர்மதா அதைச் சரியாகச் செய்கிறார். அவர் என் ஒட்டுமொத்த வீட்டையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்.
"அவர் கிளம்பிச் சென்ற பிறகு வீட்டில் ஒருவித வெறுமை ஏற்படுகிறது. ஒரு பெண் மகிழ்ச்சியாக இருந்தால் அது அவரது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் என்பர்.
"நர்மதா எனக்கு நல்லதொரு தோழியாக மாறி உள்ளார்," என்று முகம் நிறைந்த புன்னகையுடனும் பூரிப்புடனும் பேசுகிறார் புது மாப்பிள்ளை ஹரீஷ்.

