கேரளாவில் இருந்து கோடம்பாக்கத்தில் இறக்குமதியாகும் அழகான இளம் நாயகிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். நடிப்பிலும் அசத்தும் பட்சத்தில் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.
இதை நன்கு உணர்ந்திருப்பதாகவும் தமிழ்த் திரையுலகில் தமக்கு நிலையான இடம் கிடைக்கும் என நம்புவதாகவும் சொல்கிறார் மரியா வின்சென்ட்.
இவரது பெயர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகவில்லை என்றாலும், புகைப்படத்தைப் பார்த்தால் உடனே அடையாளம் கண்டுகொள்வார்கள்.
மலையாளத்தில் 'பூமரம்', 'ஃபைனல்ஸ்', 'ஹ்ருதயம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம், திறமை வாய்ந்த நடிகை என்று பெயரெடுத்துள்ளார் மரியா. இதையடுத்து அவரை தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர்.
மரியா தமிழில் நடித்த முதல் படம் 'வேலன்'. அதன் பின்னர் அருள்நிதியுடன் 'தேஜாவு', சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் ஒரு படம், இயக்குநர் ஆதிக்கின் அடுத்த பட நாயகி என்று வாய்ப்புகள் தேடி வருகின்றன.
"கதை பிடித்திருந்தால் நடிக்கத் தயார் என்று சொல்லும் பல நடிகைகள் கதை கேட்பதே இல்லை. சம்பளத்தில் மட்டுமே குறியாக உள்ளனர். ஆனால் மரியா அப்படியல்ல என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
"என்னைப் பொறுத்தவரை கதைதான் ஒரு படத்தின் கதாநாயகன். அதனால் கதை கேட்பதற்கும் அதில் நடிப்பது குறித்து முடிவெடுப்பதற்கும் கணிசமான நேரத்தை ஒதுக்குகிறேன்.
"புது நடிகை என்பதால் என் தரப்பில் இருந்து கதை குறித்து கேள்வி ஏதும் எழுப்ப இயலாது. அதனால் உடன் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றைப் பார்த்து வாய்ப்புகளை ஏற்கிறேன். அதேசமயம் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் பழக்கம் எனக்கில்லை.
"சினிமா என்பது நான் பார்க்கும் வேலை. அதற்கான சம்பளம் கிடைக்கிறது. அதேசமயம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதுவே எனது கொள்கை.
"எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் முன்பு நன்கு யோசிக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு பின்வாங்கினால் நம் மீதான நம்பகத்தன்மை போய்விடும்," என்கிறார் மரியா வின்சென்ட்.
இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா. உள்ளூர் கல்லூரியிலேயே பட்டப்படிப்பு வரை முடித்துள்ளார்.
சிறு வயது முதலே ஆடை, அலங்காரத் துறையில் ஆர்வம் உண்டாம். அதனால் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஆடை வடிவமைப்புத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டதாகச் சொல்கிறார்.
"அதன் பிறகு அழகு சாதனப் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அது தொடர்பாகவும் டிப்ளமோ படிப்பை மேற்கொண்டேன். என் தந்தை வின்சென்ட் சொந்தமாக தொழில் நடத்தி வந்தார். இப்போது சில காலமாக ஓய்வில் உள்ளார்.
"அம்மா மாயா இல்லத்தரசி. என் சகோதரி மிரண்டா அயர்லாந்து குடிமகளாகிவிட்டார். சகோதரர் இங்கிலாந்தில் குடியேறிய நிலையில், நான் மட்டும்தான் பெற்றோருடன் இருக்கிறேன்.
"இருவரையும் நன்றாகப் பார்த்துக் கொள்வதுதான் எனது முதல் வேலை. சினிமா உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அதற்குப் பிறகுதான்," என்று பொறுப்பான மகளாகப் பேசுகிறார் மரியா.
மற்ற இளம் நாயகிகளைப் போல் இவர் உணவுக்கட்டுப்பாடு குறித்து அலட்டிக்கொ ள்வதில்லை. பிடித்த உணவு என்றால் தயங்காமல் ஒருபிடி பிடிக்கிறார். அதேசமயம், உடற்பயிற்சிக்கு என கணிசமான நேரத்தை ஒதுக்கிவிடுவாராம்.
"நன்கு சாப்பிட்டு, பிடித்தமானதைச் செய்து, மகிழ்ச்சியாக வாழத்தான் நாம் மனிதர்களாகப் பிறந்திருப்பதாக நம்புகிறேன். பிறகு எதற்கு உணவுக் கட்டுப்பாடு?
"நிறைய சாப்பிடுங்கள். அதேசமயம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல்நலத்தையும் நன்றாகப் பேணுங்கள் என்பதே எனது அறிவுரை," என்கிறார் மரியா வின்சென்ட்.
மரியா வின்சென்ட்

