இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியீடு காண உள்ள திரைப்படங்களைப் பார்க்கும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
முன்னணி நடிகர்களான விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' உள்ளிட்ட சில படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என முன்பே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அடுத்த நிலையில் உள்ள இளம், அனுபவ நடிகர்களின் படங்கள் வெளியீடு காண வரிசைகட்டி நிற்கின்றன.
கார்த்தி நடித்துள்ள 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' உள்ளிட்ட படங்களை தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட உள்ளனர். பொதுவாக தீபாவளி என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். கடந்த காலங்களில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் தீபாவளி பண்டிகையின்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அடுத்தடுத்த நிலைகளில் உள்ள கதாநாயகர்களின் படங்கள் தீபாவளிக்கு அடுத்த மாதம்தான் வெளியாகும். ரசிகர்கள் இந்தப் படங்களை கொண்டாடித் தீர்ப்பர். ஆனால் இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் ஒதுங்கிக்கொண்டதால் இளம் நாயகர்களின் படங்களைத் திரையிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய், அஜித் படங்கள் பொங்கலுக்கு வெளிவருகின்றன என்றால், ரஜினியின் 'ஜெயிலர்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்தி, சிவகார்த்திகேயன் இருவரும் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்க உள்ளனர். கார்த்தியைப் பொறுத்தவரை அவரது நடிப்பில், 'விருமன்', 'பொன்னியின் செல்வன்' என்று ஏற்கெனவே இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இப்போது 'சர்தார்' படமும் வெளியாகிறது. இப்படத்தில் முதியவர் போன்று தோற்றமளிக்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான 'டாக்டர்', 'டான்' ஆகிய இரு படங்களும் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளன. அதேபோல் 'பிரின்ஸ்' படமும் அந்தப் பட்டியலில் இணைந்தால் 'ஹாட்ரிக்' வெற்றி கிடைக்கும்.
இந்த இரு படங்களைத் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்கள் சிலவும் தீபாவளி பண்டிகையின்போது தமிழகத்தில் வெளியீடு காண உள்ளன.
அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி உள்ள 'ராம் சேது' இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடல் நடுவே கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் ராமர் பாலம் பற்றிய கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.
மேலும், அஜய்தேவ்கன் நடித்துள்ள 'தேங்க் காட்', மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மான்ஸ்டர்', நிவின் பாலி நடித்துள்ள 'படவட்டு', தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஓ மை கடவுளே' படத்தின் தெலுங்கு மறுபதிப்பான 'ஓரி தேவுடா' ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாக உள்ளன.

