திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார் தமன்னா.
எல்லாரையும் போலவே தன் பெற்றோரும் திருமணம் செய்து கொள்ளும்படி தம்மிடம் வற்புறுத்திக் கொண்டே இருப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு இப்போது 32 வயதாகிறது. திருமணம் என்ற உறவு, நடைமுறை மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது.
"ஆனால் தற்போதுள்ள சூழலில் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். வேலைப்பளு காரணமாக சில நேரம் எனது பெற்றோரிடம் தொலைபேசியில்கூட பேச முடியாத நிலையில் இருக்கிறேன்.
"இன்றைய தேதியில் எனது மகிழ்ச்சி, உற்சாகம் ஆகிய அனைத்துமே படப்பிடிப்புத் தளத்தில்தான் உள்ளன. அதேசமயம் எனது தொழிலில் நான் இந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படு வதற்கு எனது பெற்றோரும் ரசிகர்களும் தரும் ஆதரவுதான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்," என்கிறார் தமன்னா.
ஒரு பெண் குழந்தைக்குத் தாயான நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் பிரணிதா. மேலும், சூட்டோடு சூடாக மாலத் தீவுக்குப் பறந்த அவர், அங்கு தன்னை வெவ்வேறு விதமாகப் படம்பிடித்து, அந்தப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள் ளார். அவற்றைக் கண்ட ரசிகர்கள் சிலர், "திருமண மானதையும் குழந்தை பிறந்ததையும் மறந்து வீட்டீர்களா?" என்று கிண்டல் செய்துள்ளனர். ஆனால் இதுபோன்ற கேலிகளை பிரணிதா கண்டுகொள்வதாக இல்லை. பல இயக்குநர்களிடம் அவர் கதைகளைக் கேட்டு வருகிறார் என்றும் அவர் நடிக்க உள்ள புதுப்படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. "ஆண் குழந்தை பெற்று நான்கு மாதங்களுக்குள் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க வந்த காஜல் அகர்வால் தான் எனது முன்மாதிரி," என்கிறாராம் பிரணிதா.
இவர், தமிழில் கார்த்தி ஜோடியாக 'சகுனி', சூர்யாவுடன் 'மாஸ் என்கிற மாசிலாமணி', 'உதயன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒரு கதாபாத்திரம் பிடித்துப்போனால் அதில் மனம் ஒன்றி நடிப்பேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
படப்பிடிப்பு முடிந்த பிறகும் தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் தாக்கம் தம்மீது சில காலம் நீடிக்கும் என்றும் சொல்கிறார்.
"சில கதாபாத்திரங்கள் என்னை விடாமல் பின் தொடரும். அப்படி என்னோடு சேர்ந்து எத்தனையோ பாத்திரங்கள் சில மாதங்கள், ஆண்டுகள்கூட பயணம் செய்ததுண்டு.
"நடிப்பதற்கு முன்பிருந்தே அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்ற வடிவம் என் மனதில் ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடிக்க ஆரம்பிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவேன்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது 'போலா ஷங்கர்' என்ற தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவியின் சகோதரியாக நடித்து வருபவர், 'தூம் தாம் தோஸ்தானா' என்ற தெலுங்குப் பாடலுக்கு ஆடியுள்ள லுங்கி நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் ராஜமவுலி அடுத்து தெலுங்கு முன்னணி நாயகன் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்நிலை யில், இப்படத்தில் நாயகியாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாம்.
'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. 'பத்து தல' படத்தின் சிறப்பு சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 'பத்து தல' படம் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

