சுந்தர்.சி. இயக்கும் படங்களுக்கான படப்பிடிப்புத்தளம் என்றால் அங்கு கலகலப்புக்கும் உற்சாகத்துக்கும் குறைவிருக்காது என்கிறார் ஸ்ரீகாந்த்.
தற்போது சுந்தர்.சி. இயக்கி வரும் 'காப்பி வித் காதல்' படத்தில் நடித்துள்ள மூன்று நாயகர்களில் இவரும் ஒருவர்.
படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவாரசியங்களை அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
இந்தப் படத்தில் ஜீவா, ஜெய் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி, 'பிக்பாஸ்' புகழ் ரைசா வில்சன், அம்ரிதா உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். ஊட்டி, குன்னூர் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார் சுந்தர்.சி.
"படப்பிடிப்பு நடந்த இடத்தையே ஒரு முக்கியமான கதாபாத்திரம் எனலாம். அந்த அளவுக்கு உயிரோட்டமான இடம். கண்ணில்படும் பசுமையான காட்சிகளும் பருவ நிலையும் அந்த இடத்தை ரம்மியமானதாக மாற்றியிருந்தன.
"அதனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் மட்டுமல்ல, அங்கு நடித்த அனைவரும் எப்போதும் ஒருவிதமான புத்துணர்ச்சியுடனேயே வலம் வந்தோம். அது வண்ணமயமான இடம்," என்கிறார் ஸ்ரீகாந்த்.
இந்தப் படத்தில் நடித்தபோதுதான் காலஞ்சென்ற நடிகர் பிரதாப் போத்தனுடன் அறிமுகமானாராம். சில நாள்களிலேயே இருவருக்கும் மத்தியில் நெருக்கமான நட்பும் புரிதலும் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
"ஒருநாள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அவரது நடிப்பில் உருவான, 'என் இனிய பொன் நிலாவே' பாடல் என் நினைவுக்கு வந்தது. இம்முறை கையில் கித்தாரை ஏந்திக்கொண்டு நான் பாட, அவர் அதைப் பொறுமையாகக் கேட்டு ரசித்தார். அந்த அனுபவங்களை வாழ்நாளில் மறக்கவே இயலாது. அந்த வகையில் இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது, மனதுக்கு நெருக்கமானது," என்கிறார் ஸ்ரீகாந்த்.
'காஃபி வித் காதல்' படப்பிடிப்பை இரவு, பகல் பாராமல் நடத்தி முடித்துள்ளார் சுந்தர்.சி. ஒவ்வொரு நாளும் விடுமுறையின்போது சுற்றுலாவுக்குச் சென்றதுபோல் ஜாலியாக இருந்தது என்பதே ஒட்டுமொத்த படக்குழுவின் கருத்தாக உள்ளது.
"எப்போது படப்பிடிப்பு தொடங்கியது, எப்போது முடிந்தது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பு நடக்கும் இடம் ஏதோ திருவிழாவைப்போல் காட்சியளிக்கும். காரணம், அத்தனை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
"தினமும் படப்பிடிப்பு முடிந்த கையோடு நான், ஜீவா, ஜெய் உட்பட அனைவரும் ஒன்றாக அமர்ந்து இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பற்றி பேசி, அவற்றைப் பாடி மகிழ்ந்தோம். அவற்றை 'இளையராஜாவின் இசை இரவுகள்' என என் நினைவில் வைத்திருப்பேன்.
"அவ்வாறு கழிந்த இரவுகளின்போது ஒருநாள் இப்படத்தில் நடித்துள்ள பின்னணிப் பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி எங்களுக்காக விடிய விடிய நல்ல பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். எல்லாருமே, 'என் இனிய பொன் நிலாவே' பாடலைத்தான் விரும்பிக் கேட்டோம். இனி அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அவருடன் கழித்த பொழுதுகள்தான் என் நினைவுக்கு வரும். அப்பாடலைக் கேட்பதே அவருக்குச் செலுத்தப்படும் அஞ்சலிதான்," என்று சொல்லும் ஸ்ரீகாந்த், முதன்முறையாக சுந்தர்.சி. இயக்கத்தில் நடித்துள்ளார்.
ஒரு நடிகனாக சுந்தர்.சி. படத்தில் நடிப்பது நல்ல அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்கிறார்.
ஒவ்வொரு காட்சியையும் சுந்தர்.சி. விவரிக்கும் பாங்கு மிக அலாதியானது என்று குறிப்பிடுவர், அதை அப்படியே பின்பற்றினால் போதும், ரசிகர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும் என்கிறார். மேலும் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் எடுத்து முடிப்பார் என்றும் பாராட்டுகிறார். 'காஃபி வித் காதல்' படத்தில் யோகி பாபுவும் ரெடின் கிங்ஸ்லியும் நகைச்சுவையில் அசத்தி உள்ளனர். யோகிபாபு ஒவ்வொரு காட்சியிலும் தனக்கான பகுதியை மெருகேற்றிக்கொண்டே இருப்பாராம்.
"படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவேளையில் நான், யோகி, எல்லாரும் சீட்டு விளையாடி மகிழ்வோம். பிரதாப் போத்தன் சார் தம்மிடம் நிறைய காதல் கதைகள் இருப்பதாக அடிக்கடி கூறுவார். 'காஃபி வித் காதல்' பட வேலைகள் முடிந்த பின்னர், இருவரும் அந்தக் கதைகள் குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுக்க இருந்தோம். அதற்குள் காலம் வேறு கணக்குகளை போட்டுவிட்டது," என்கிறார் ஸ்ரீகாந்த்.