தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரட்டை வேடத்தில் அசத்திய கார்த்தி

2 mins read
d5c2848d-85ea-43fa-b05c-3b5f1a67fa1b
-

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் படம் 'சர்தார்'. இந்தப் படம் தீபாவளி சரவெடியாக நேற்று காலை உலகெங்கும் வெளியானது. ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்', விருமன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

'இரும்புத்திரை' படத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணத்தை எப்படி திருடுகின்றனர் என்பதைக் காட்டிய இயக்குநர் பி.எஸ். மித்ரன், சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தில் அறிவுத் திருட்டு பற்றி படம் எடுத்திருந்தார். இந்நிலையில், 'சர்தார்' படத்தில் தண்ணீர் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளார்.

படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்திக் நடித்திருக்கிறார். அதில் அப்பா கார்த்தி ராணுவ உளவாளியாக இருக்கிறார். ஆனால், அவர் தேசத் துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார். அதனால் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்துகொள்கிறது. அவருடைய மகனான கார்த்தி மட்டும் அவருடைய சித்தப்பா முனீஸ்காந்தினால் வளர்க்கப்படுகிறார். வளர்ந்த கார்த்தியும் போலிஸ் அதிகாரியாக மாறுகிறார். பெரிய அளவில் பிரபலமாக வேண்டும் என்று துடிக்கும் கார்த்திக்கு ஒரு வழக்கு கிடைக்கிறது.

இதனிடையே தண்ணீர் பிரச்சினை சம்பவம் நிகழ்கிறது. நோய்வாய்ப் பட்ட சிறுவனாக ரித்து நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக லைலா வருகிறார். தன்னுடைய மகனுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு தண்ணீர் காரணம் அல்ல. அதை அடைத்து விற்கும் பாட்டிலில்தான் பிரச்சினை என்று சொல்கிறார். தன்னுடைய மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டதை நினைத்து லைலா வருத்தப்படுகிறார். தண்ணீர் பிரச்சினைக்கு எதிராக பல விஷயங்கள் செய்கிறார். இறுதியில் மகன் கார்த்தி எடுக்கும் வழக்கு அவருடைய அப்பா 'சர்தார்' இடமே கொண்டு செல்கிறது.

உண்மையில் 'சர்தார்' கார்த்திக் செய்த தவறு என்ன? அவர் ஏன் தேசத் துரோகியாக அறிவிக்கப்பட்டார்? குற்றவாளியில் இருந்து தன் அப்பாவை மகன் காப்பாற்றினாரா? தண்ணீர் பிரச்சினை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கார்த்திக் அப்பா சர்தாராகவும் மகன் போலிசாகவும் இரட்டை வேடத்தில் மிரட்டி இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுடைய வேலையைச் சரியாக செய்து இருக்கிறார்கள். படத்தைப் பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.