பூங்குழலி வேடத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவர் சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தை தயாரித்திருந்தார். தற்பொழுது 'குமாரி' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் 'அம்மு'. இந்தப் படம் தெலுங்கில் நேரடியாக தயாரிக்கப்பட்டு பின் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'ஓடிடி' தளத்தில் வெளியாகி உள்ளது.
படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா என இரண்டு நாயகர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படத்தில் காவலராக நடித்திருக்கும் நவீன் சந்திராவிற்கு மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமி அம்மு என்ற வேடத்தில் நடித்திருப்பார்.
முதலில் நல்லவராகத் தோன்றும் நவீன் திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கொடுமைப்
படுத்தும் காவலராக வந்து மிரட்டி இருப்பார். தினம் தினம் அடி வாங்கி அலுத்துப்போன அம்மு சிறையில் இருந்து வந்த கைதியான பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து எவ்வாறு கணவரை சிறைக்கு அனுப்புகிறார் என்பதுதான் கதை.
இந்தப் படத்திற்குத் தடைகேட்டு தற்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மயூரா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம், 'அம்மு' என்ற தலைப்பு எங்களுடையது. 2019ஆம் ஆண்டு நாங்கள் அந்தப் பெயரை பதிவு செய்துள்ளோம். கொரோனா பிரச்சினையால் படத்தின் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
"இந்நிலையில் அந்த தலைப்பில் படம் வெளியாகி அதை 'ஓடிடி' தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தப் படத்திற்கு தடை விதிக்கவேண்டும்," என்று புகார் அளித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக் சுப்புராஜுக்கும் படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
"அம்மு தெலுங்குப் படம். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தலைப்பு தெலுங்குப் படத்தைக் கட்டுப்படுத்தாது," என்று கார்த்திக் சுப்புராஜ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் படத்தை பலரும் 'ஓடிடி' தளத்தில் பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

