தாம் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் வெற்றி தமிழ், தெலுங்கு திரையுலகங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகக் கூறுகிறார் சிவகார்த்திகேயன்.
'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்து இரு வெற்றிப் படங்களைத் தந்த உற்சாகத்துடன் மூன்றாவது வெற்றிக்காகக் காத்திருக்கிறது அவரது தரப்பு.
முந்தைய இரு படங்களின் வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்துள்ளன. இந்த வெற்றிகளின் மூலம் நூறு கோடி ரூபாய் வசூல் கொண்ட கதாநாயகர்களின் பட்டியலில் சிவாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், 'பிரின்ஸ்' படத்தின் வெளியீட்டு உரிமையோ திரைகாண்பதற்கு முன்பாகவே நூறு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி உள்ளது. இனி விநியோகிப்பாளர்கள் கொடுத்த காசுக்கும் மேல் வசூல் பெற்றுவிட்டால், சிவாவின் திரையுலக வளர்ச்சி அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்கும்.
இதையடுத்து அவர் அடுத்து நடித்து வரும் 'மாவீரன்' படம் குறித்த எதிர்பார்ப்பு கோடம்பாக்க வட்டாரங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, சிவாவை அவரது ரசிகர்கள் 'பிரின்ஸ்' என்ற அடைமொழியுடன் குறிப்பிடத் தொடங்கி உள்ளனர். இதுதான் அவரது பட்டப்பெயராக நீடிக்குமா எனத் தெரியவில்லை.
மேலும், 'டான்' படத்துக்காக தாமே இயற்றியுள்ள பாடல் ஒன்றில் 'டார்லிங் பிரின்ஸ்' என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார் சிவா. கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது, ரசிகர்கள் தனக்கு கொடுத்துள்ள பட்டத்தை அவர் அங்கீகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்துப் புள்ளிகள்.
"இதுகுறித்து செய்தியாளர்கள் பலர் முன்பே கேட்டுவிட்டனர். உண்மையில் வேறு தலைப்பு கிடைக்காததால்தான் 'பிரின்ஸ்' என்ற தலைப்பை தேர்வு செய்தோம் (சிரிக்கிறார்).
"நிறைய தலைப்புகளைப் பரிசீலித்தும் மனநிறைவு ஏற்படவில்லை. மேலும், ஆசிரியர்கள் குறித்த கதை என்பதால் படத்தின் தலைப்பு அதற்கேற்ப இருக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அது மட்டுமல்ல, படத்தின் கதாநாயகிக்கு இங்கிலாந்துடன் தொடர்பு இருக்கும்.
"ரசிகர்கள் பலர் என்னை சமூக ஊடகங்களில் 'பிரின்ஸ்' என்று குறிப்பிட்டு வருவது உண்மைதான். இந்தக் காரணங்களை முன்வைத்தே இத்தலைப்பை தேர்வு செய்தோம்," என்கிறார் சிவகார்த்திகேயன்.
"நான் நடித்து ஒரு படம் தீபாவளிப் பண்டிகையின்போது வெளியாவது இதுவே முதன்முறை. அதனால் எனது உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றித் தவிக்கிறேன்.
"எனது படத்துடன் 'சர்தார்' படமும் வெளியாகி றது. இரு வெவ்வேறு கதைக்களங்கள், கதாநாயகர்களைக் கொண்ட படங்கள் வெளியாவதில் மகிழ்ச்சி. சிறு வயதில் தீபாவளி வந்துவிட்டால் போதும், புதுப்படங்கள் குறித்து தகவல்களை சேகரித்துக்கொண்டு, அவற்றை வரிசையாகப் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பேன்.
"இன்று வாழ்க்கை என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இடம் நான் எதிர்பார்த்திராத ஒன்று. நான் நடித்த படத்தை தீபாவளியின்போது என் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கப்போகிறேன்.
"நேரடித் தெலுங்குப் படமாக அல்லாமல் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது என்றபோதிலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். என் மீது தெலுங்கு விநியோகிப் பாளர்களும் ரசிகர்களும் வைத்துள்ள நம்பிக்கை நெகிழ வைக்கிறது," என்கிறார் சிவகார்த்திகேயன்.
, : தகவல் சாதனங்கள்

