நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாடகைத் தாய் மூலமாக அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் பிறந்த நேரம் அன்னைக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதுடன் சம்பளமும் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.
திருமணம் முடிந்து 4 மாதம் மட்டுமே ஆன நிலையில் பெற்றோர் ஆகிவிட்டதாக விக்னேஷ் சிவன் அறிவிக்கவே அது பலருக்கும் கேள்வியை எழுப்பியது. பின்னர் அது வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தை என தெரியவந்தது.
வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றதால் நயன்தாராவைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், அனைத்து சர்ச்சை களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தன்பக்கம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளார் நயன்தாரா. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் 'காட் பாதர்'. தெலுங்கில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு
ரூ. 4 கோடியை நயன்தாரா சம்பளமாக வாங்கியிருந்தார். குழந்தை பிறந்த பிறகு நயன்தாராவின் நடிப்பில் வெளியான முதல் படம் இது.
இதன்பின் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாராவிற்கு சம்பளமாக ரூ.10 கோடி பேசியுள்ளார்கள்.
அதைப்போல அஜித்துடன் நடிக்கும் 'ஏகே 62' படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளமாக பெற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி யுள்ளது. மேலும் அவரை வைத்துப் படம் எடுத்தால் நஷ்டம் இல்லாமல் படம் நன்றாக வசூலைத் தருகிறது என்பதால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். எல்லாமே இரட்டை குழந்தைகள் பிறந்த ராசிதான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் பிள்ளைகளுக்கு 'உயிர் உலகம்' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். 'உயிரும் உலகமும்' தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் அதிகமான மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய திசையை வழங்குவார்கள் என்று ஜோதிடர்களும் கணித்துள்ளனர்.
இதில் உயிர் என்றால் மிகவும் கவர்ச்சிகரமானவர். உலகைத் தன்வசப்படுத்தக் கூடியவர். இனிமையான, ஆடம்பரமான முறையில் வாழ்பவர். தங்களிடம் உள்ளவற்றை அழகாக்குபவர். அதைப்போல உலகம் என்றால் சுறுசுறுப்பானவர், ஆற்றல் மிக்கவர், தைரியமானவர், எதிலும் ஆர்வமுள்ளவர். மேலும், "எந்தச் சூழ்நிலையிலும் இந்த இரட்டையர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து முன்னேறுவார்கள்," என்று பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாரூக் கான் - கவுரி கான் ஜோடி, நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சன்னி லியோன் - டேனியல் வெபர் என ஏராளமானோர் இப்படி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் முதன்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

