தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர்களுக்கு அஞ்சலி நாயர் குறித்து தெரிந்திருக்கும். 'நெடுநல்வாடை', 'டாணாக்காரன்' என இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அடுத்து 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒரு படத்தில் ஒப்பந்தமானோம், இரண்டு காதல் பாடல்களுக்கு நடனமாடினோம், கவர்ச்சி காட்டினோம் என்றில்லாமல், உணர்வுபூர்வமாக நடிப்பதற்கும் வாய்ப்புள்ள கதைக்களங்களை மட்டுமே தேர்வு செய்கிறார் அஞ்சலி நாயர்.
"கடந்த 2019ஆம் ஆண்டு 'நெடுநல்வாடை' படம் வெளியானது. அதன் பின்னர் சினிமா பயணம் சிறப்பாகவும் சிக்கலின்றியும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கொரோனா தொற்றுப்பரவல் தீவிரமடைந்து எனது எதிர்கால கனவுகளையும் திட்டங்களையும் கனவு களையும் தவிடுபொடியாக்கிவிட்டது.
"அதன் பிறகு 'டாணாக்காரன்' படம் என் நடிப்புக்கு நல்ல விமர்சனத்தை பெற்றுத்தந்தது. அது மட்டுமல்ல, தனிப்பட்ட வகையில் என் மனதுக்கு நெருக்கமான படமாகவும் அமைந்தது," என்கிறார் அஞ்சலி.
இவர் ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அஞ்சலியின் பெற்றோர் இருவருமே இந்திய ராணுவ அதிகாரிகள். அதனால் தங்கள் மகளும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்து உயர் பதவியில் அமர வேண்டும் என விரும்பி உள்ளனர்.
"அப்பா அம்மாவுக்கு நானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதில்தான் விருப்பம் அதிகம். ஆனால், நான் 'சைக்காலஜி' துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, வேறு துறையில் நல்ல வேலையில் சேர வேண்டும் எனத் திட்டமிட்டேன்.
"மற்றவர்களுடன் கலந்துரையாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மனிதர்களைப் படிக்க வேண்டும் என விரும்புவேன். என் சகோதரியும் ராணுவத்தில்தான் பணியாற்றுகிறார். அவரும் சரி, பெற்றோரும் சரி... எனது முடிவில் மனநிறைவு இல்லை என்றாலும் எனது சினிமா ஆசைக்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
"ராணுவப் பள்ளியில்தான் படித்தேன். அந்தச் சமயத்தில் சினிமா, நடிப்பு, மாடலிங் குறித்தெல்லாம் அறவே யோசித்தது கிடையாது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று அதில் நடித்தேன். நானே எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கின. அவற்றை மறுக்க மனம் வரவில்லை. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் முதல் படமான 'நெடுநல்வாடை' நாயகி வாய்ப்பு கிடைத்தது.
"என்னுடைய நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தாலும் பெற்றோருக்கு நான் சினிமா துறையில் நீடிப்பது ஏனோ பிடிக்கவில்லை. விளம்பரங்களில் நடித்தபோதே கோபமாக இருந்தனர். ஆனால் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்தக் கோபத்தையும் மீறி நடித்தேன்.
"ஒருகட்டத்தில் சினிமா துறை பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு பயந்தனர். இருவரும் மறைமுகமாக, என் மனம் நோகாத வகையில் சில அறிவுரைகளைக் கூறினர். ஆனால் நான் கேட்கவில்லை.
"பிறகு அடுத்தடுத்த எனது நடிப்பில் இண்டு படங்கள் வெளியானதும், எப்படியோ நம் மகள் இந்தத் துறையில் வளர்ந்து பெரிய ஆளாக முடியும் என்ற நம்பிக்கை வந்ததும் என் போக்கில் செல்ல அனுமதித்தனர்," என்கிறார் அஞ்சலி நாயர்.
'காலங்களில் அவள் வசந்தம்' படம் குறித்து?
"கதைப்படி கதாநாயகியின் கதாபாத்திரம் என் மனதைக் கவரும் வகையில் இருந்தது. சரியாகச் சொன்னால் என்னுடைய 80 விழுக்காடு குணாதிசயங்களுடன் பொருந்திப் போகும் பாத்திரம் எனலாம்.
"தனக்குப் பிடித்தமானதை துணிச்சலுடன் செய்யும் இளம் பெண். எதையும் வெளிப்படையாகப் பேசத் தயங்காதவள். திருமணத்துக்கு முன்பும் பிறகும் வரக்கூடிய காதலில் எது உண்மையானது என்பதுதான் கதை. இதை ஜாலியாகவும் நகைச்சுவையாகவும் அலசியுள்ளார் இயக்குநர். சி.வி.குமார் தயாரிக்க, ராகவ் இயக்க, கௌஷிக் என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார்," என்று சொல்லும் அஞ்சலிக்கு நடிகர்களில் தனுஷின் நடிப்புதான் ரொம்பப் பிடிக்குமாம்.
நடிகைகளில் நித்யா மேனனின் தீவிர ரசிகை. இருவரும் இணைந்து நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்ததாகச் சொல்கிறார்.

