மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தின் தமிழ் மறுபதிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், அவரது நடிப்பு படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருப்பதாகப் பாராட்டி உள்ளார் கண்ணன்.
"தமிழ் மறுபதிப்பிற்காக எந்த மாற்றமும் செய்யவில்லை. மலையாளத்தில் நிமிஷா சஜயன் நடித்த வேடத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
"காரைக்குடியில் நடக்கும் கதை என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். எல்லா பெண்களையும் போலவே இப்படத்தின் நாயகியும் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பாள். அவை என்னவாகின்றன என்பதுதான் கதை.
"புதிதாக திருமணமான ஓர் இளம் பெண்ணின் ஏமாற்றத்தை, கோபத்தை, வெறுப்பை, வலியை மிக இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா. அவரைச் சுற்றித்தான் சம்பவங்கள் நிகழும்.
"முழுக் கதையையும் தன் தோளில் சுமக்கும் பெரிய பொறுப்பைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். அவருக்கு இந்தப் படம் நிச்சயமாக பாராட்டுகளைப் பெற்றுத்தரும். படம் விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் இயக்குநர் கண்ணன்.

