நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். தனுஷ் தற்பொழுது 'வாத்தி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
'திருச்சிற்றம்பலம்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'நானே வருவேன்'. இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கி இருந்தார். நடிகர் தனுஷ் கதை, திரைக்கதையை எழுதி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். நடிகர் தனுஷ் தந்தை, மகன் வேடங்களில் நடித்து இருந்தார். கலைப்புலி.எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தார். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி இயக்கிய 'வாத்தி' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
முதன்முதலாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். படக் குழுவுக்கும் தனுஷுக்கும் இடையில் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பில் முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது.
அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் கூடிய சுவரொட்டி செப்டம்பர் 19ஆம் தேதி வெளியானபோதே, அந்த சுவரொட்டியைத் தனுஷ் கண்டு கொள்ளவில்லை. அதை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் பகிரவில்லை.
இந்நிலையில் தீபாவளி தினத்தன்று படத்தின் புதிய சுவரொட்டியைத் தீபாவளி வாழ்த்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த சுவரொட்டியில் டிசம்பர் 2ஆம் தேதி படம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 26ஆம் தேதிதான் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் தனுஷ் கண்டு கொள்ளாதது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குநரோ எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தனுஷ் தற்பொழுது கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவராஜ்குமாருடன் இணைந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
தனுஷ் பற்றி சிவராஜ்குமார் கூறுகையில், "நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்துள்ளேன். சொல்லப்போனால் தனுஷில் என்னை நான் பார்க்கிறேன். அவரது அந்தக் குறும்புத்தனம், நண்பர்களிடம் அவர் நடந்துகொள்வது எல்லாம் பார்க்கும்போது அவர்தான் நான். நான்தான் அவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
"அதனால் அவர் மீது எனக்கு தனியாக ஒரு விருப்பம் எப்போதுமே இருக்கிறது. அந்த வகையில் இப்போது தனுஷுடன் இணைந்து நடிக்க தேடி வந்த நல்ல வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை. இந்தப் படம் வெளியாகும்போது தனுஷுக்கும் எனக்குமான பிணைப்பை ரசிகர்கள் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள்," என்று கூறியுள்ளார் சிவராஜ்குமார்.
சிவராஜ் குமார் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அதன் பிறகு தனுஷுடன் நடிக்கத் தொடங்குவார்.
தனுஷ் 2015ல் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'வஜ்ராகயா' என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

