செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
42d35359-00a3-4886-9f00-750c4958f528
-
multi-img1 of 2

'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். முன்னணி நட்சத்திரத்துடன் இணைந்து நடித்தால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எந்த படங்களும் அமையவில்லை. அதனால் படத்தின் முக்கிய நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இரண்டாவது நாயகியாக நடித்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அந்த முடிவினால் அவர் தற்பொழுது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' என்ற படத்திலும் தெலுங்கில் பிரபாஸுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது.

ராமாயணக் கதையை வைத்து தேசிய விருது பெற்ற இயக்குநர் ஓம் ராவத் 'ஆதிபுருஷ்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் பிரபாஸ் ராமராகவும் ராவணனாக சைப் அலிகானும் நடித்து இருக்கிறார்கள். இந்தப் படத்தை கிராபிக்ஸ் மூலம் படமாக்கி இருக்கிறார்கள். இதன் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த பிரபாஸின் ரசிகர்கள், "சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் படம் போல இருக்கிறது. பிரபாஸ் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டாம்," என்று பதிவிட்டு இருந்தனர். அதனால் மனமுடைந்து போனார் பிரபாஸ். மேலும் ஒரு பிரச்சினை தற்பொழுது கிளம்பியுள்ளது. அதாவது ராமர் மிகவும் சாந்தமானவர். இந்தப் படத்தின் சுவரொட்டியில் ராமர் மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்தத் தவற்றைத் திருத்தும் பணியில் தயாரிப்புத் தரப்பு இறங்கி, தற்பொழுது சாந்தமாக இருக்கும் ராமராக நடித்திருக்கும் பிரபாஸின் படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் தெய்வீகம் ததும்பும் வகையில் பிரபாஸின் படம் அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

'மதுபானக்கடை' படத்தின் மூலம் பலரையும் கவர்ந்தவர் கமலக்கண்ணன். மதுபானக் கடைக்குள் நடக்கும் கதையாக அந்தப் படத்தை உருவாக்கி இருந்தார். அதன்பிறகு சிபிராஜ், ஆண்ட்ரியா நடித்த 'வட்டம்' படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படம் அதிக கவனம் பெறவில்லை. இதற்கு இடையில் அவர் இயக்கி உள்ள படம் 'குரங்கு பெடல்'. இந்தப் படம் கோவாவில் நடக்கும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பதன் மூலம் கவனம் பெற்றுள்ளது. சைக்கிள் ஓட்டத்தெரியாத ஒரு தகப்பனுக்கும் சைக்கிள் ஓட்டிப் பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான கதையைக் கொண்டது இந்த படம். இந்தப் படத்தில் குழந்தைகளுடன் காளி வெங்கட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.