நடிகை சமந்தாவுக்கு 'மையோஸ்டைட்டிஸ்' உடல்நலப் பிரச்சினை

நடிகை சமந்தாவுக்கு 'மையோஸ்டைட்டிஸ்' உடல்நலப் பிரச்சினை

1 mins read
5123ad75-e4d4-4313-9a38-7d7a64a16dc1
-
Google News Preferred Icon

நடிகை சமந்தா சனிக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், தமக்கு 'மையோஸ்டைட்டிஸ்' எனும் தன்னுடல் தாக்கநிலை (ஆட்டோஇம்யூன்) பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமது உடல் ஆரோக்கியம் குறித்து பகிர்ந்த அவர், "நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்," என்று பதிவிட்டார்.

'மையோஸ்டைட்டிஸ்' பிரச்சினை உடையோருக்குப் பொதுவாக தசைவலி ஏற்படும். நாளடைவில் தசைகள் வலுவிழந்தும் போகக்கூடும்.

மருத்துவமனையில் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்த சமந்தா, "யசோதா திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு (டிரெய்லர்) ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்துகொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை அளிக்கிறது.

"சில மாதங்களுக்கு முன்பு எனக்கு 'மையோஸ்டைட்டிஸ்' எனப்படும் ஆட்டோஇம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

"முழுமையாக குணமடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்சினையிலிருந்து குணமடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

"இந்தப் பாதிப்பை ஏற்றுக்கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாள்களும் கெட்ட நாள்களும் உண்டு," என்று பதிவிட்டுள்ளார்.

சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும் பூரண குணமடைய வாழ்த்து கூறியும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.