'இதய இளவரசி' என்று குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது திரையுலக ரசிகர்களை யோசனையில் ஆழ்த்தி உள்ளது.
அவர் நடிகை அதிதி ராவைக் காதலிப்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் பலர் கூறியுள்ளனர்.
'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி. நேற்று முன்தினம் அவருக்குப் பிறந்தநாள். இதையடுத்து திரையுலகத்தினரும் ரசிகர்களும் அதிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சித்தார்த்தும் வாழ்த்து கூறினார். அதிதியுடன் தாம் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டதுடன், 'இதய இளவரசி' என்ற தலைப்பையும் இடம்பெறச் செய்துள்ளார்.
"இதய இளவரசி அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அவை நிறைவேறும் என்று நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார் சித்தார்த். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.