'வாரிசு' படம் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே விநியோக உரிமை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என அனைத்து தென் மாநிலங்களிலும் பெருந்தொகைக்கு விலை போயிருப்பதாகத் தகவல்.
'பீஸ்ட்' படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது அட்லீ, லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக திடீரென தெலுங்கு இயக்குநர் வம்சியைத் தேர்வு செய்தார் விஜய். இவர் தெலுங்கில் சில வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். கார்த்தி நடித்த 'தோழா' படம் மூலமாகத் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல பெயரும் பாராட்டும் பெற்றவர் வம்சி.
அவர் குடும்பப் பாசம், நகைச்சுவை என அழகான கதைக்களத்தை வைத்து ஒரு கதையைச் சொல்ல, அது பிடித்துப்போனதால் விஜய் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் எனத் தகவல். அண்மைய பேட்டியில் 'வாரிசு' படம் தொடர்பாக பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் வம்சி.
"ஓர் இயக்குநருக்கும் கதாநாயகனுக்குமான முதல் சந்திப்பு என்பது காதலர்களின் முதல் சந்திப்பு போன்று மிக முக்கியமானது. மனதில் ஒருவித படபடப்பு, எதிர்பார்ப்பு, தயக்கம் என எல்லாம் இருக்கும். அதிலும் விஜய் போன்ற பெரிய நட்சத்திரத்தை சந்திக்கும்போது இயல்பாகவே பதற்றம் ஏற்படும்.
"ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்குப் பறந்து சென்று விஜய்யை சந்தித்தோம். அவரது (விஜய்) வீட்டுக்குள் நுழைந்து, சில நிமிடங்கள் காத்திருந்தபோது, தனது அறையில் இருந்து சிரித்தபடியே வெளியே வந்து, தண்ணீர் கொடுத்து நலம் விசாரித்தார்.
"சிறிய அறிமுகப் படலத்துக்குப் பிறகு நான் சொன்ன கதையை மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டார். ஆனால் கதை சொல்லி முடிக்கப்படும் வரை முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை. கதை பிடித்திருக்கிறதா, இல்லையா என எனக்குப் பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது.
"இறுதிக் காட்சியை விவரித்து முடித்ததும், முப்பது விநாடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, 'நல்ல கதை சார். நாம் இணைந்து பணியாற்றலாம்' என்று அவர் சுருக்கமாக சொன்னபோது, என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை," என்கிறார் இயக்குநர் வம்சி.
'வாரிசு' என்ற தலைப்பைத் தேர்வு செய்ய என்ன காரணம்?
"ஒரு தலைப்பு என்பது அந்தப் படத்தின் கதைக்கருவை மறைமுகமாகச் சொல்லும்படி இருக்க வேண்டும். நாம் கையாளும் கதைக்குப் பொருத்தமானதாக இருப்பதும் அவசியம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது, சரியான தலைப்புதான் என்பதை ஒவ்வொரு ரசிகராலும் உணர முடியும்.
"விஜய்யிடம் கதையைச் சொல்லி முடித்த உடனேயே மனதில் தோன்றிய தலைப்பு இது. குடும்ப உணர்வுகளுடன் கூடிய கதை என்பதால், 'படம் இப்படித்தான் இருக்கும்' என முன்கூட்டியே முடிவு செய்துவிட வேண்டாம். விஜய் ரசிகர்களுக்கு என்ன தேவையோ, அந்த அம்சங்கள் அனைத்தும் 'வாரிசு' படத்தில் இடம்பெறும்," என்கிறார் வம்சி.
சிறார்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்குமான பட மாக 'வாரிசு' உருவாகி வருவதாகக் குறிப்பிடுபவர், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தங்கள் குடும்பத்தில் நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார்.
படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா குறித்து?
"விஜய் சார் நடிக்கச் சம்மதித்ததும், இதுவரை அவருடன் நடித்திராத நாயகியாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அடுத்த நொடியே மனதில் தோன்றியவர் ராஷ்மிகா தான். அவர் விஜய்யின் தீவிர ரசிகை.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவருக்குப் பிடித்த நாயகன் யார் என்று கேட்டபோது, ஒரு நொடிகூட தாமதிக்காமல் தளபதி விஜய் என்றார். கதை கேட்பதற்கு முன்பே கால்ஷீட் ஒதுக்கிவிட்டார். இந்தப் படத்தில் சில சிறப்பு அம்சங்களும் உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யும் பிரகாஷ் ராஜ் சாரும் இணைந்து நடிக்கின்றனர். அதனால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.
, :
விஜய்

