திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
613e79d4-a50a-44c1-a2fe-df31257a5ec2
-
multi-img1 of 4

 ஒரே சமயத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது 'டாக்டர் 56' திரைப்படம். நாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார் பிரியாமணி. அண்மைக் காலமாக அறிவியல், நவீன தொழில்நுட்பம் சார்ந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதை அடிப்படையாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளதாகச் சொல்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் ஆனந்த். சிபிஐ அதிகாரியாக நடிக்க சிறப்புப் பயிற்சி பெற்றாராம் பிரியா மணி. கரடுமுரடாகச் சித்திரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை நிச்சயம் அசர வைக்கும் என்கிறார்.

 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த யோகம், திரிஷாவுக்குப் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அதன் இரண்டாம் பாகம் உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மேலும் ஐந்து படங்களுக்கு கதை கேட்டு, கால்ஷீட் ஒதுக்கி உள்ளாராம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகத் தகவல். மறுபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் அவருக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏற்கெனவே 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' ஆகிய படங்களில் அஜித்தும் திரிஷாவும் ஜோடியாக நடித்துள்ளனர்.

 இந்தியாவில் நவீன நாகரிகம் வளர்ச்சி கண்டாலும், பாலியல் தொடர்பான விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

பாலியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதை பெண்கள் தவிர்த்துவிடுவ தாகவும் இத்தகைய போக்கு நீடிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

"இதுபோன்ற தயக்கங்களால் தான் பெண்கள் பல்வேறு பாலியல் துன்பங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியைப் போதிக்க வேண்டும். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் 'ஹெச்ஐவி' போன்ற பால்வினை நோய்களுக்குப் பலர் பலியாக நேரிடுகிறது," என்று சொல்லும் ரகுல் பிரீத் சிங், இப்போது 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார்.

 'ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தி வரும் விஜய் சேதுபதிக்கு இசையிலும் ஆர்வம் அதிகம். திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என விரும்புகிறாராம். இதையடுத்து இசை அமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவிடம் இசை கற்று வருகிறார். விஜய்சேதுபதி நடித்து 2016ல் வெளியான 'சேதுபதி' படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து இருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பு இருவரையும் நெருக்கமான நண்பர்களாக மாற்றியுள்ளது. முறைப்படி இசையைக் கற்று, ஓரளவு தேறியதும் தாம் நடிக்க உள்ள படத்துக்கு விஜய்சேதுபதி இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 'கடைசி விவசாயி', 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் இந்தியிலும் உருவாகும் இரண்டு புதுப் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.