'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் நடிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செம்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இவர், "ஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப் படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதுபோல் ஒரு படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் வெளிப்படையாக படம் நன்றாக இல்லை என்று தைரியமாக ரசிகர்கள் வெளிப்படையாக தங்கள் விமர்சனத்தை சொல்லவேண்டும். ரசனையை வளர்ப்பது என்னுடைய கடமையாக நினைக்கிறேன்," என்று பேசினார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் பல படங்களில் நடித்து வந்தார் காயத்ரி. 'மாமனிதன்' படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டினர். அதனைத் தொடர்ந்து கமலுடன் 'விக்ரம்' படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படங்களின் வெற்றியினால் காயத்ரிக்கு மலையாளத்தில் குஞ்சாக்கோ போனுக்கு ஜோடியாக 'என்னா தான் கேஸ் கொடு' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான பிரியதர்ஷன், தான் அடுத்ததாக மலையாளத்தில் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக காயத்ரியை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் 'மதராசப்பட்டினம்' படத்தில் ஏமி ஜாக்சனை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார் ஏமி. பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் ஏ.எல்.விஜய் மீண்டும் அவரை 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைத்து வந்திருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் கால் வைத்து இருக்கிறார் ஏமி ஜாக்சன். பணி நிமித்தமாக லண்டன் செல்லும் அருண் விஜய் அங்கு ஏமி ஜாக்சனை சந்தித்து காதல் கொள்கிறார். லண்டனில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு சிறை செல்லும் அருண் விஜய்யை, ஏமி ஜாக்சன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. லண்டன் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் சென்னையில் மூன்று கோடி செலவில் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்து படப்பிடிப்பு நடத்தப்போவதாகக் கூறியிருக்கிறார் இயக்குநர்.

