நாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வருபவர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. இவர் கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் விஜய் சேதுபதி நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்', 'மாமனிதன்' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து அவர் வெற்றிமாறனின் 'விடுதலை' அட்லீயின் 'ஜவான்' உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'மெர்ரி கிறிஸ்மஸ்'. பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் உள்பட பலர் நடித்து இருக்கும் இந்தப் படம் பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 'மெர்ரி கிறிஸ்மஸ்' திரைப்படம் வரும் கிறிஸ்மஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவரின் ரசிகர்கள் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

