திரையரங்குகளில் வெளியாகும் படங்களைவிட 'ஓடிடி' தளங்களில் வெளியாகும் படங்கள் அதிகரித்து இருக்கின்றன. அதிலும் இணையத்தொடர்களை குறைந்த செலவில் தயாரித்து அதனை 'ஓடிடி' தளங்களில் வெளியிட பல
இயக்குநர்கள் ஆர்வம் காட்டி
வருகிறார்கள். அஞ்சலி நாயகியாக நடித்திருக்கும் 'ஜான்சி' இணையத்தொடர் தற்பொழுது 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
படுக்கையறைக் காட்சிகள், குளிக்கும் காட்சிகள் என
அஞ்சலி தாராளம் காட்டி நடித்துள்ள இந்த இணையத்தொடருக்கு 18+ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பல படங்களில் குடும்பப் பெண்ணாக நடித்து வந்த அஞ்சலி இந்தப் படத்தில் அதிகக் கவர்ச்சியுடன் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த இணையத்தொடரை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெலுங்கில் இயக்கி உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஜான்சி மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
'மேட் டேமன்' நடிப்பில் வெளியான 'போர்ன்' இணையத்தொடரைப்போலத்தான் இந்தத் தொடரின் கதையும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடக்கத்திலேயே பெரிய சண்டைக்குப் பிறகு அருவியில் இருந்து கீழே விழும் அஞ்சலி, பழைய நினைவுகளை இழந்து, தனது மகளுடனும் துணையாக இருப்பவருடனும் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
அவருடைய பழைய நினைவுகள் திரும்பி வருவதும் அவர் தன்னை யார் என்பதை அறிந்து கொண்டதும் அதற்குக் காரணமான எதிரிகளை பந்தாடுவதுதான் 'ஜான்சி' இணையத்தொடரின் கதை.
திரு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் அஞ்சலி, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா,
சம்யுக்தா ஹார்னாட் நடிப்பில் இந்த இணையத்தொடர் உருவாகி உள்ளது.
இதுபற்றி இயக்குநர் கூறுகையில், "முதலில் இணையத்தொடராக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாகவும் இருந்தது. மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து அதிக செலவு இல்லாமல் தயாரித்து இருக்கிறோம்.
"கதையை அட்டகாசமாக எழுதி இருந்தார்கள். படத்தைப் பார்க்கும் போது மக்களுக்குத் தெரியும். கிருஷ்ணாவை நடிக்க வைத்து படத்தை இயக்குவேன் என்று நினைத்தேன்.
"ஆனால், நடிகர் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாக கூறியதும் முதலில் தயங்கினேன். ஆனால், எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நன்றாகப் பார்த்து பார்த்து செய்து கொடுத்தார்.
"ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அஞ்சலி இதில் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடித்துஇருக்கிறார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்," என்று கூறினார் இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி.

