'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குநர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் இயக்குநர் மணிரத்னம், "அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அதனால் முதலில் வணங்கிக்கொள்கிறேன்.
"அமரர் கல்கிக்குத்தான் முதல் நன்றி. 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்த வாசகர்கள் அனைவருக்கும்
ஒவ்வோர் ஆசை, கனவு இருக்கும்.
"அதனைத் திரைப்படமாகக் கொண்டு வருவது என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசையை அடைந்துவிட்டேன். இதனை அனுமதித்து அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி.
"'பொன்னியின் செல்வன்' படத்தை எடுக்கலாம் என்று இருக்கிறேன் என்று சுபாஷ்கரன் சாரிடம் சொன்னேன். உடனே இரண்டு நிமிடங்களில் சரி என்று சொல்லிவிட்டார்.
"இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு குடும்பம்போல் செயல்பட்டார்கள். அவர்கள் இல்லை என்றால் நிச்சயமாக இதை உருவாக்கி இருக்க முடியாது.
"முக்கியமாக கொரோனா காலகட்டத்தில் உடல் எடையை ஏற்றாமல் இருந்ததற்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் மாறியதற்கும் நன்றி.
"இப்படத்தில் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என
நிறைய பேர் பணியாற்றினார்கள்.
"அவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இவ்வளவு பேர் நம்மை நம்பி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வேலை வாங்குவது ஒரு பெரிய பொறுப்பு எனத்தோன்றும்.
"ஒவ்வொரு காட்சியையும் எடுக்கும் போது எப்படி எடுக்கப்போகிறோம் என்ற பிரமிப்பு இருக்கும். ஆனால், எப்படியோ எடுத்துவிடுவோம்.
"பின்னணியில் வேலை செய்பவர்கள் நம் கண்களுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால் வேலை நடக்கும். அவர்களுடைய பங்களிப்பை மிகப்பெரியதாகக்
கருதுகிறேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அனைவருக்கும் நன்றி," என்று பேசினார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையில் இயக்குநர் மணிரத்னமும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் இணைந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அலுவலகத்துக்கு நேரில் சென்று, அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது கல்கி ராஜேந்திரன், தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு மணிரத்தினமும் சுபாஷ்கரனும் இணைந்து ரூ.1 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கினர்.

