'யசோதா'விற்காக துணிந்த சமந்தா

'யசோதா'விற்காக துணிந்த சமந்தா

2 mins read
0b963f20-0d4b-43e3-9e9e-d194b042a1b4
-

ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'யசோதா'. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயராகிவிட்டார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 'பான் இந்தியா' படமாக பல மொழிகளில் நாளைத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிஷர்மா இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கருப்பு நிற உடையுடன் தயாராகிவிட்டார் சமந்தா. அந்த உடையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டு, "எனது நல்ல நண்பர் இயக்குநர் ராஜ் (ஃபேமிலி மேன் புகழ்) சொல்வதுபோல், ஒருநாள் எப்படி இருந்தாலும் எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும். 'யசோதா' திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஒருநாள் ராஜ் சொல்வதுபோல் இருக்க விரும்புகிறேன்.

"இந்தப் படத்தின் கதைக்களம்தான் என்னை இப்படத்தை தேர்வு செய்ய வைத்தது. படத்தின் கருவே வாடகைத் தாய் கிடையாது. கதையில் அதுவும் கூறப்பட்டுள்ளது அவ்வளவுதான். வாடகைத் தாய் பற்றிய என் கருத்து என்னவென்று கேட்டால், எனக்கு இதில் எந்தக் கருத்தும் கிடையாது. அவர்களுக்கு எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ அதனைச் செய்யவேண்டும்.

"நான் சண்டைக் காட்சிகளில் நடிப்பேன் என்று நினைத் ததில்லை. 'யசோதா' படத்தில் சிறப்பான சண்டைக் காட்சிகள் உள்ளன. திரையரங்குகளில் அதைப் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இப்படத்தில் சிறந்த கலைஞர்களுடன் இணைந்து நான் பணிபுரிந்துள்ளேன்.

"நான் எப்போதும் ரசிகர்களின் பார்வையிலிருந்துதான் கதையைக் கேட்பேன். அதன் அடிப்படையில் நிச்சயம் 'யசோதா' அனைவருக்கும் பிடிக்கும். ஆச்சரியமான 'த்ரில்லர்' படமாக இந்தப் படம் இருக்கும்.

"சில நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். சில நாள் உங்களுக்கு கெட்டதாக அமையலாம். சில நாட்கள் உங்களால் படுக்கையிலிருந்துகூட எழ முடியாத நாளாக இருக்கும். அந்த நிலையில் நானும் போராடிக்கொண்டு இருக்கிறேன்.

"உங்களது நோயைப் பற்றி ஏன் வெளியே சொன்னீர்கள் என்று கேட்கிறார்கள். சொல்லவில்லை என்றால்தான் அது தவறு. எனது ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே பொது வெளியில் காண்பிக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் நல்ல காலமும் உண்டு. கெட்ட காலமும் உண்டு என்பதை தெரிவிக்க விரும்பினேன்," என்று கண்ணீருடன் அவர் பேசினார்.

அதைக் கேட்ட ரசிகர்களும் பிரபலங்களும் கண்ணீருடன் அவருடைய படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்தப் பதிவை மட்டும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து 'லைக்' செய்து உள்ளார்கள்.

தாங்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது அதுபற்றி சிறிதும் கவலைப்படாமல் செய்தியாளர் சந்திப்புக்கும் படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கும் வர மறுக்கும் சில நாயகர்கள், நாயகிகளுக்கு மத்தியில் தனது உடல்நலிவையும் மீறி சமந்தா எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு சினிமா உலகத்தினரையும் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது. பலரும் அவரின் 'யசோதா' படம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.