இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியின் துவக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தின் சுவரொட்டியை வெளியிட்டார். 'ஜூங்கா' படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் டிசம்பர் 24ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
'சேதுபதி' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி மீண்டும் காவல் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயர் வைத்துள்ளனர். அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். விஜய் சேதுபதி 'பைக்'கில் அமர்ந்துகொண்டு வருவதுபோன்று இடம்பெற்றுள்ள சுவரொட்டியை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு திரிஷா தன்னுடைய சம்பளத்தை நான்கு கோடி ரூபாய்க்கு உயர்த்தியுள்ளார். சென்னையில் தேனாம்பேட்டையில் பல கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வைத்திருக்கிறார். ஹைதராபாத்தில் இருக்கும் பங்களாவின் மதிப்பு ரூ.6 கோடி. மூன்று சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ.6.5 கோடி. திரிஷாவின் மற்ற சொத்துகள் சுமார் ரூ.90 கோடி. மேலும் அவரிடம் விலைமதிப்பில்லாத அளவிற்கு நகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூர்யா '2D' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல படங்களைத் தயாரித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த 'சூரரைப்போற்று' படத்தையும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரித்திருந்தார். இந்நிலையில் தான் தயாரிக்கும் படங்களில் மற்றவர்களின் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாக நடிக்க முடிகிறது என்று கூறுகிறார் சூர்யா.

