வழக்கமாக ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளரையும் மீறி படத்தின் கதாநாயகனை முன்னிலைப்படுத்துவார்கள். பாடல்கள் நன்றாக இருந்தாலும் நாயகனுக்குத்தான் பாராட்டுகள் போய்ச்சேரும்.
ஆனால் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி உள்ள 'கலகத் தலைவன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லாம் தலைகீழாக இருந்தது. ஆளாளுக்கு உதயநிதியைப் பாராட்டிப் பேச, அவரோ படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், கதாநாயகியை மனதாரப் பாராட்டினார்.
அதிலும், நாயகி நிதி அகர்வால் இந்தப் படத்துக்காக அடி, உதைகளை வாங்கிக்கொண்டு பொறுமையாக நடித்ததாகக் கூறி அனைவரையும் அதிர வைத்தார் உதயநிதி.
"இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி குறிப்பிட்ட தொகைக்குள், அதிலும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எடுத்து முடித்துள்ளார். ஆனால் மூன்று ஆண்டுகளாக தாம் எடுத்த படத்தை அவர் மிகுந்த பொறுமையுடன் செதுக்கி வந்துள்ளார் என்பதுதான் முக்கியம்.
"நவம்பர் 18ஆம் தேதி வெளியீடு என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்னும்கூட செதுக்கிக்கொண்டிருந்திருப்பார். செதுக்கிய வரை போதும் என்று வெளியிட முடிவு செய்தோம்.
"இந்தப் படத்திற்காக என்னைவிட அதிகமாக உழைத்தது கதை நாயகி நிதி அகர்வால்தான். என்னைவிட அவர்தான் அதிக காட்சிகளில் நடித்திருக்கிறார்.
"இனி அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அடி உதையெல்லாம் வாங்கி நடித்திருக்கிறார்.
"நான் முன்புபோல் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை. ஒருசிலர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நான் மட்டுமே தாங்கிப் பிடித்திருப்பதுபோல் பேசுகிறார்கள். தயவுசெய்து சினிமாவில் நடிப்பதை விட்டுவிடாதீர்கள் என்றும் கூறுகிறார்கள்.
"எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் இப்போதுதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். நான் நடித்த படங்களின் இரண்டாம் பாகத்தில் நடியுங்கள் என்கிறார்கள். ஆனால் எனக்கு வேறு பல வேலைகள் உள்ளன. அதனால் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 'மாமன்னன்' படத்தை முடித்துவிட்டு கைப்பேசி எண்ணையும் மாற்றிவிட்டு அமைதியாக ஒதுங்கிவிடப் போகிறேன்," என்றார் உதயநிதி ஸ்டாலின்.
'கலகத் தலைவன்' படம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கதை என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இயக்குநர் மகிழ் திருமேனி விளக்கம் அளித்துள்ளார்.
"இது நேரடி அரசியல் படம் கிடையாது. அடிதடியும் அதிரடியும் நிறைந்த கதை. சமுதாயத்தில் பல விஷயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பணம், மொழி, சாதி, பதவி, அரசியல், பொருளாதாரம் என்று பல கூறுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
"இன்று நாம் சரியான புரிதலில் இல்லை என்றாலும் எந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் அரசியல், சமூகவியல், பொருளியல் என்று அதன் பின்புலம் தானாக மனதில் பதிந்துவிடும். அது போன்று இதில் மறைமுக அரசியல் இருக்கலாமே தவிர இதில் நேரடி அரசியல் கிடையாது.
"கதைக்களம் நிதி பரிவர்த்தனை களைப் பின்னணியாகக் கொண்டது. இப்படத்தில் சொல்லப்படும் கதை நம் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். இந்த மாதிரியான நிகழ்வுகளை சிலர் உணர்ந்தி ருப்பார்கள். உணராதவர்களும் இருப்பார்கள். ஆனால், நம் எல்லோருடைய வாழ்க்கையோடும் தொடர்புடைய கதை," என்கிறார் மகிழ் திருமேனி.
நிதி அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள போதிலும் தமிழில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை என்று குறிப்பிடுபவர், 'கலகத் தலைவன்' படம் அந்த மனக்குறையைப் போக்கும் என்கிறார்.
"நிதி அகர்வால் இயல்பாக நடிக்கக்கூடிய திறமைசாலி.
"படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், அவரது கவனம் முழுவதும் படமாக்கப்படும் காட்சிகளில் தான் குவிந்திருக்கும். அவருக்கு நல்ல எதிர் காலம் நிச்சயம் உண்டு," என்கிறார் மகிழ் திருமேனி.
, :

