நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'சாமானியன்' படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார் ராமராஜன். இதற்காக 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இளையராஜாவுடன் கைகோத்துள்ளார்.
'சாமானியன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்ட அடுத்த நிமிடமே, அந்தப் படம் வெற்றி பெறுவது உறுதி எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி உற்சாக மடைந்தாராம் ராமராஜன்.
"இருவருக்கும் இடையேயான அந்தச் சந்திப்பே நெகிழ்வாக இருந்தது. ராமராஜன் சார் தன் வீட்டின் வரவேற்பறையிலேயே இளையராஜா, கங்கை அமரன் இருவரின் மத்தியில் தாம் புன்னகைக்கும் புகைப்படம் ஒன்றைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார். தனது வெற்றிக்குப் பெரிதும் காரணம் இளையராஜாவின் இசைதான் என எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார். அவர் நடித்த 'அண்ணன்' படத்திற்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. காரணம் படத்தின் பட்ஜெட் போதுமானதாக இல்லை. எனினும், 'சாமானியன்' படத்திற்காக இளையராஜாவை நம்பிக்கையுடன் சந்தித்தார். அப்போது 'பத்தாண்டுகளுக்குப் பிறகு நாயகனாக நடிக்க வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்' என விரும்பிக் கேட்டுக்கொள்ள, இளையராஜாவும் மகிழ்வுடன் சம்மதித்துவிட்டார். ராமராஜனிடமும் நலம் விசாரித்துவிட்டு, 'உடல்நலனையும் நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்' என்று பாசத்தோடு சொல்லியிருக்கிறார் ராஜா," என்கிறார்கள் ராமராஜனுக்கு நெருக்கமானவர்கள்.