இதுவரை இளையர்களைக் கவரும் வகையில் பக்கத்து வீட்டுப் பையன் என்று சொல்லத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அசோக் செல்வன். இப்போது வில்லன் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தப் போவதாகச் சொல்கிறார்.
அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து கிரா மத்துக் கதையிலும் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறாராம்.
"சினிமா துறையில் எந்தவித பின்புலமும் இல்லாமல் அறிமுகமானேன். எனது வெற்றிகளுக்குப் பின்னணியில் கடும் உழைப்பும் போராட்டங்களும் உள்ளன.
"திரைத்துறையில் சாதிப்பதற்கு முன்பு எல்லாருமே பல்வேறு மேடு பள்ளங்களைக் கடந்துதான் வருகிறார்கள். அதை முழுமையாக உணர்ந்துள்ளேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்ட கதைக்களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன்.
"கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. விரைவில் அத்தகைய கதையில் என்னைப் பார்க்கலாம். கிராமத்துப் பின்னணி கொண்ட கதையில் வில்லனாக நடிப்பது நிச்சயம் சவாலான அனுபவமாக இருக்கும்," என்கிறார் அசோக் செல்வன்.

