கமல்ஹாசன் கதர் ஆடைகளை விற்கும் நிறுவனம் ஒன்றை 2020 முதல் நடத்தி வருகிறார். தற்பொழுது அதை மேலும் விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் அனைத்துலக உடை வடிவமைப்பாளர்களுடனும் இந்தியாவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராமுவுடன் இணைந்து அழகன், அழகிகளுடன் கதர் உடையில் படப்பிடிப்பு நடத்தி அந்தக் காணொளியை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
வெறும் பொருளாதார ரீதியிலான தொழிலாக மட்டும் இல்லாமல், கதர் ஆடை விற்பனையாளர்கள், நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக கதர் ஆடைக்கு என 'ஹவுஸ் ஆஃப் கதர்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அந்த நிறுவனத்தை
அறிமுகப்படுத்தினார்.
அனைத்துலக உடை வடிவமைப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம் கைத்தறி ஆடைகளை ஊக்குவிப்பதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாது கதர் ஆடை என்றாலே வயதானவர்களும் அரசியல்வாதிகளும் அணிந்து கொள்வது என்ற மாய தோற்றத்தை கமல் ஹாசன் மாற்ற விரும்பினார்.
அதற்காக உடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராமுவின் வடிவமைப்பில் கமல், 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியின் போது விதவிதமான கதர் உடைகளில் வந்து அசத்தினார்.
அத்தோடு கதர் குறித்த தகவல்களையும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார். மெல்லிய பருத்தி நூலில் கமல் அணிந்திருந்த உடைகள் கதர் எனக்கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"வாழ்வாதாரம் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்காக இப்படியொரு நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதாகவும் காதி அணியும் பழக்கம் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் வர வேண்டும்," என்றும் கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் கதரை மேலும் இளையர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் விதவிதமான கதர் உடைகளில் மாடல்கள் தோன்ற, இறுதியில் கம்பீரமாக காதி உடையில் கமல் ஹாசன் தோன்றி ரசிகர்களை மிரள வைக்கும் காணொளியை வெளியிட்டு இருந்தார்.
இந்தக் காணொளியைத் தொடர்ந்து கமல்ஹாசனின் கதர் ஆடைகளுக்கான 'ஹவுஸ் ஆஃப் கதர்' மீது இளம் தலைமுறையினரின் பார்வை திரும்பியுள்ளது.
இந்தக் காணொளியைப் பார்க்கும்போது கதர் ஆடைகளை வயதானவர்தான் அணிய வேண்டும் என்று அனைவரும் கருதி வரும் நிலையை மாற்றி, இளைஞர்களும் இதை அணிந்து கொள்ளலாம் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் புகைப்படங்களும் காணொளியும் இணையத்தில் கலக்கி வருகின்றன.
இதற்கிடையில் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிகளில் எவ்வளவுதான் கோபம் வந்தாலும், அடிதடி நடந்ததே இல்லை. அதற்கு கமலும் அனுமதி கொடுத்ததே இல்லை.
எல்லை மீறிய பேச்சுக்கள், தள்ளி விடுவது போன்ற சண்டை உச்சகட்டமாக இருந்தாலும்
கத்தியே சண்டையை போடுவார்கள். பின்னர் வெள்ளிக்கிழமை ஆனதும், மன்னிப்புக் கேட்டு சமாதானம் ஆகி விடுவார்கள்.
சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களைப் பற்றி மற்றவர்கள் எழுதியிருக்கும் கடிதங்களை போட்டியாளர் அசீம்மை படிக்கச் சொன்னார் கமல்.
அதில் 'பிக் பாஸ்' வீட்டில் நடந்து கொள்வதைப்போல வெளியே தனலட்சுமி வெளியே நடந்துகொண்டால் சும்மா பளாருன்னு அறை விழுந்து இருக்கும்," என்று ஏடிகே என்ற மற்றொரு போட்டியாளர் எழுதிய கடிதத்தை அசீம் கொஞ்சம் கூட தயக்கமின்றி, மற்ற கடிதங்களைப் படிப்பதைவிட மகிழ்ச்சியாக படித்தார். ஆனால், உடனடியாக கமல் அதனை அங்கேயே கண்டித்து நிறுத்தினார்.
"பெண் பிள்ளையை விளையாட்டுக்குக்கூட அடிக்கவேண்டும் என்று சொல்லக்கூடாது. அந்த கடிதத்தைத் தூக்கி வீசிட்டு அடுத்த கடிதத்தைப் படியுங்கள் அசீம்," என்று கமல் கண்டித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியை முடிந்த வரை கண்ணியம் குறையாமல் கமல் நடத்தி வருகிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், இப்படித் தன்னை அறைய வேண்டும் என யாரோ நினைத்துள்ளார்களே என நினைத்து மனதளவில் தவித்துக் கொண்டிருந்த தனலெட்சுமிக்கு, கமல் இப்படி பேசியதும் கண்ணீருடன் நன்றியைத் தெரிவித்தார். மேலும் தன்னைப்பற்றி அசீம் படிக்கும்போது பலத்த கைத்தட்டல் கள் வந்ததால் தனக்கு வெளியே அதிகமான எதிர்ப்புகள் உள்ளதைப் புரிந்து கொண்டார் தனலெட்சுமி.
முன்னணி வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த நவீன கதர் உடைகளில் அழகன்கள், அழகிகளுக்கு நடுவில் கம்பீரமாக கதர் உடையில் கமல்ஹாசன்.

