சமூகத்தில் நிலவும் அவலங்களை தோலுரித்துக் காட்டும் கதைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் என்றால் தனுஷ் உற்சாகமாகிவிடுவார். அந்த வகையில், கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் படமாக உருவாகிறது 'வாத்தி'.
தெலுங்கில் முன்னணி இயக்குநராக உள்ள வெங்கி அத்லூரி இயக்குகிறார். இது தமிழில் அவருக்கு அறிமுகப் படம்.
"மேலை நாடுகளில் அரசுகள் மருத்துவத்தையும் கல்வியையும் தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்கின்றன. காரணம், இரண்டுமே இளையர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையவை. அதில் ஏதும் தவறு ஏற்பட்டால், எதிர்காலத் தலைமுறையும் மொத்த நாடும் பாதிக்கப்படும்.
"மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானால், நாட்டின் எதிர்காலமும் பிரச்சினைக்குள்ளாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், அந்தத் தவற்றைச் சரிசெய்வது இன்னும் பெரிய வேலையாக மாறிவிடும். 'வாத்தி' படம் கல்வித்துறையில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கிறது. நியாயங்களை துணிச்சலுடன் சொல்கிறது. தனுஷ் அருமையாக நடித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் வெங்கி.
வெறும் நடிகராக மட்டுமல்லாமல், நல்ல இயக்குநராகவும் இருப்பதால் தனுஷை வைத்து படம் இயக்குவது எளிது என்று குறிப்பிடுபவர், இளம் இயக்குநர்கள் அனைவருக்குமே தனுஷுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் நிச்சயமாக இருக்கும் என்கிறார்.
"தனுஷைப் போன்ற நடிகரை இயக்கும்போது நிறைய உழைப்பும் அறிவாற்றலும் தேவைப்படும். கதையை உணர்வுப்பூர்வமாக சொல்ல வேண்டிய அவசியமும் தன்னால் எழும். தமிழகம், ஆந்திரா, கேரளா என்று நம் ரசிகர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே மனோபாவம் கொண்டவர்கள்தான். அதை மனதிற்கொண்டு படங்களை இயக்க வேண்டும்.
"சுவாரசியமான கதையை படமாக்கும்போது, சமூகத்துக்குத் தேவையான சில அம்சங்களைச் சொல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த வகையில் 'வாத்தி'யை ஒரு வழக்கமான கதையாகக் கருத முடியாது. இது ஒரு 'பீரியட்' படமாகவும் உருவாகிறது.
"இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனுஷ் என்ற நடிகர் தனது திறமையை திரையில் முழுமையாக வெளிப்படுத்தினால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும். அந்த அளவுக்கு நடிப்பால் நம்மை மிரளவும் வியக்கவும் வைக்கிறார்," என்கிறார் இயக்குநர் வெங்கி.
சரி... 'வாத்தி' என்ன சொல்லப் போகிறது?
"இந்தியாவில் கல்வித்துறையில் அதிகப்படியான குளறுபடிகள் உள்ளன. பணம் இல்லை என்றால் கல்வியின் தரமும் குறைந்துவிடும். அதிகமாக பணம் கொடுத்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். ஏன் இந்தப் பாகுபாடு என்பது குறித்து 'வாத்தி' கேள்வி எழுப்புகிறது. இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது என்பதையும் இந்தப் படம் தெளிவுபடுத்துகிறது.
"இன்றைய தேதியில் சமுதாய அக்கறையுடன் ஒரு பிரச்சினையை தட்டிக் கேட்பவன் கேலிப் பொருளாகிவிடுகிறான். பிழைக்கத் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுகிறான். அவனிடம் உள்ள நல்ல குணத்தை ஒதுக்கிவிடுகிறார்கள்.
"இப்போதெல்லாம் நம்மைச் சுற்றி எது நடந்தாலும் கவனிக்காதது போல், திரும்பிப் பார்க்காமல் போய்விடுகிறோம். நல்ல நோக்கங்களுடன் செயல்படும் இளைஞன், வல்லவனாக இருந்தும், மனம் வெறுத்துப் போகும் சூழலில் ஆவேசத்துக்குள்ளானால் என்ன நடக்கும் என்பதுதான் 'வாத்தி' கதை," என்கிறார் வெங்கி.
'வாத்தி' தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பில் வெளியாகிறது. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்கிறார் வெங்கி. தெலுங்கு பதிப்பின் வியாபாரத்தை மனதிற்கொண்டு தணிகலபரணி, சாய்குமார் என அனுபவ நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
, :

