'கர்ணன்' படத்தில் வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரியாக அசத்திய நட்ராஜ் மீண்டும் 'காக்கிச் சட்டை' அணிந்து நடிக்கும் படம் 'குருமூர்த்தி'.
ஒளிப்பதிவாளராக இருந்த தனசேகர் இயக்கும் இந்தப் படத்தில், நட்ராஜ் வில்லத்தனம் செய்யப் போவதில்லை. ஏனெனில் இது நேர்மையான காவல்துறை அதிகாரியின் கதையாம்.
"நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையில் பணம்தான முக்கியம் என்றாகிவிட்டது. அனைவருமே பணத்துக்காக அல்லாடுகிறோம். காலை தூங்கி எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்குச் செல்லும்வரை பணத்தின் தேவை இருக்கிறது. அந்தப் பணத்தைத் தேடித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கும்.
"நம்முடைய பணத்தை வைத்திருக்கும்போது எந்தவித பிரச்சி னையும் இல்லை. அடுத்தவர்களின் பணம் என்று வரும்போது அதைச் சுரண்டுவதற்கு வரிசைகட்டி நிற்பார்கள். அந்தப் பணத்தை பாதுகாக்க ஒரே வழி காவல்துறையின் உதவியைப் பெறுவதுதான்.
"காவல்துறையினர் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் எப்படி நம் பணத்தைப் பாதுகாக்கிறார்கள், பணம், மனைவியை மீறிய உறவால் வரும் பிரச்சினைகள், காவல்துறையின் தியாகம் என்று வாழ்க்கையோடு கலந்துள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து பேசுகிறோம்," என்கிறார் இயக்குநர் தனசேகர்.
இந்தப் படத்துக்கான கதையை எழுதும்போதே சமுத்திரக்கனி அல்லது நட்ராஜை தான் நாயகனாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். கதை பிடித்திருந்தாலும் சமுத் திரக்கனியால் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போக, நட்ராஜை அணுகி உள்ளனர்.
"காவல்துறை அதிகாரியாக படம் முழுவதும் மீசையை முறுக்கினாலும், பல இடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நட்ராஜ். எப்போதும் உணர்ச்சி ததும்ப காணப்படுபவர், இந்தப் படத்தில் முதன்முறையாக சில காதல் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
"படம் பார்த்து முடித்ததும் நட்ராஜ் என்பவர் மறைந்து, குருமூர்த்தி என்ற காவல்துறை அதிகாரிதான் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இருப்பார்," என்கிறார் இயக்குநர் தனசேகர்.
பூனம் பஜ்வாவை நாயகியாக நடிக்க வைத்துள்ளனர். அதற்கான காரணத்தை தெளிவாக விவரிக்கிறார் இயக்குநர்.
"கதைப்படி, நட்ராஜ் நடுத்தர வயதில் இருப்பவர். குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவருக்கு குடும்பப் பாங்கான தோற்றமும் அழகும் கொண்ட இணை தேவைப்பட்டது. அதற்கு பூனம் பொருத்தமாக இருந்தார்," என்கிறார் தனசேகர்.

