திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 "தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் வடிவேலுக்கு தனி இடம் உள்ளது. அதை யாராலும் நிரப்ப இயலாது. ஆனாலும் அந்த இடத்தில் அமர தனக்கு மட்டுமே தகுதி உள்ளது என்பதை மீண்டும் உறுதி செய்வதில் அவர் முனைப்பாக உள்ளார்," என்கிறார் இயக்குநர் சுராஜ்.

இவரது இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

"மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக வடிவேலு அண்ணன் என்னிடம் கூறியபோது, அவர் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனையை நான்தான் முன்வைத்தேன். அதற்கு ஒப்புக்கொண்டு நல்ல கதையை தயார் செய்யுமாறு கூறினார்.

"சில நாள்களுக்குப் பிறகு மூன்று கதைகளை மேலோட்டமாக விவரித்தபோது, அவற்றுள் ஒரு கதையை தேர்வு செய்தார். 'நாய் சேகர்' என்ற தலைப்பையும் நான்தான் பரிந்துரைத்தேன். இம்முறை நாயகனின் சாகசங்களை விவரிக்காமல், குழந்தைகளுக்கும் பிடித்தமான விஷயங்களைக் கையாள வேண்டும் என முடிவு செய்தோம்.

"படம் அருமையான படைப்பாக உருவாகி உள்ளது," என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் சுராஜ்.

 தமிழில் மீண்டும் தனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாக உற்சாகமடைகிறார் தான்யா ஹோப். வசந்த் ரவி நடிக்கும் 'வெப்பன்' படத்தில் இவர்தான் நாயகி. குஹன் சென்னியப்பன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'வெள்ள ராஜா' இணையத்தொடர் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். "புதுப் படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளன்று அவரைப் பார்த்ததும் பதற்ற மாகிவிட்டேன். அவர் என் நிலையைப் புரிந்துகொண்டு, மென்மையாகப் பேசினார். பிறகு அவர் வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றி நடித்தபோது எல்லாமே எளிதாகத் தோன்றியது. அனுபவத்துக்கு உள்ள மதிப்பை அப்போதுதான் உணர்ந்தேன்," என்கிறார் தான்யா. அடுத்து இளம் நாயகன் ஒருவருடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

 தமிழ்ப் படங்களை மொழிமாற்றம் செய்து தெலுங்கில் வெளி யிடுவதால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்குப் படங்களை அதிக திரையரங்கு களில் வெளியிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, எதிர்வரும் பொங்கல் பண்டிகையின்போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப் பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்முறை பொங்கலுக்கு சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீர நரசிம்ம ரெட்டி', அகில் நடித்துள்ள 'ஏஜெண்ட்' ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த மூன்று படங்களுக்கு மட்டுமே அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின்போது விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' படங்களை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் புது முடிவால் அஜித், விஜய் படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

 பூங்கா, திறந்தவெளிகள் என எங்கு வேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம் என்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்.