தென்னிந்தியாவில் ஐந்து முறை 'ஃபிலிம்பேர்' விருது பெற்று, 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா தன்னுடைய 38வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
2003ல் 'மனசினக்கரே' என்ற மலையாள படத்தில் அறிமுகமான நயன்தாரா, அந்தப் படத்தைத் தொடர்ந்து 2005ல் தமிழ்த் திரையுலகில் 'ஐயா' திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்தார்.
ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமானால் ஒரு நடிகை நிறைய சாதித்து
இருக்க வேண்டும். ஆனால் தனது 2வது தமிழ்ப் படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் நிரந்தரமாக மிளிரத் தொடங்கினார் நயன்தாரா.
தொடர்ந்து அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பால் பலரின் மனத்தைக் கொள்ளையடிக்கத் தொடங்கினார் இவர்.
தமிழ்த் திரையுலகில் அதிகமான விருது
களைப் பெற்ற சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர்.
மேலும் தமிழக அரசு கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கி வரும் 'கலைமாமணி' விருதையும் ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் 'நந்தி'
விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவ விருதாக இவை கருதப்படுகின்றன. இவை தவிர பல விருதுகளையும் நயன்தாரா பெற்றுள்ளார்.
விறுவிறு என்று முன்னேறிக்கொண்டு இருந்த நயன்தாரா சில சறுக்கல்களையும் சந்திக்கத் தொடங்கினார். முதலில் நடிகர் சிம்பு, பிறகு பிரபுதேவா என இரண்டு பிரபலங்களைக் காதலித்துப் பிரிந்ததால் மனத்தளவில் உடைந்து போனார்.
தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்குப் பிறகு நயன்தாராவைத் தேட வேண்டியிருந்தது. திரைத்துறையிலிருந்து இரண்டு ஆண்டுகள் விலகியிருந்தார்.
சோகத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க மீண்டும் படங்களில் நடிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று மீண்டும் களமிறங்கினார் நயன்தாரா.
அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி', அதற்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நயன்தாராவின் நடிப்புக்கும் சவாலாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகனைச் சாராமல் ஒரு கதாநாயகியால் தனித்து நின்று பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என முதலில் துணிச்சலுடன் களம் இறங்கியவர் நயன்தாராதான்.
2017ல் வெளியான 'அறம்', நயன்தாராவின் மதிப்பை மேலும் உயர்த்தியது. அடுத்த ஆண்டு வெளியான 'கோலமாவு கோகிலா' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
கதாநாயகர்களின் தயவு இல்லாமல் வெற்றிப் படங்களை கொடுக்க முடியும் என மற்ற கதாநாயகிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கத்தொடங்கினார் நயன்தாரா.
அதனால் பெரிய புரட்சி தென்னிந்தியத் திரையுலகில் நிகழ்ந்து வருகிறது. ஜோதிகா, சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, ஓவியா, அமலா பால் என ஒரு பெரிய படையே கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார்கள்.
'நானும் ரெளடிதான்' படத்தின் உருவாக்கத்தின்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். ஜூன் மாதம் இருவரும் திருமணம்
செய்துகொண்டார்கள்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதையை ஆவணப்படமாக கௌதம் மேனன் உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப் படம் 'நெட்பிளிக்ஸ் ஓடிடி'யில் விரைவில் வெளியாகவுள்ளது.
Nayanthara: Beyond the Fairy Tale என்ற அந்த ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
தம்பதியர் அக்டோபர் 9 அன்று தாங்கள் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆனதாக இன்ஸ்டகிராமில் அறிவித்தனர்.
இந்தியாவிலேயே தனது படத்தின் விளம்பரத்துக்காக நேர்காணல் தராத ஒரே நடிகை நயன்தாராதான்.
நயன்தாராவின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.250 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
நயன்தாராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவரின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து வந்தார் நடிகை ராதிகா.
நயன்தாரா புதிதாக நடிக்க இருக்கும் ஒரு படத்திற்கு 35 நாள்கள் ஒதுக்கியுள்ளதாகவும் அதற்கு சம்பளமாக ரூ.10 கோடி கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்த் திரையின் முன்னணி நட்சத்திரமான நயன்தாரா தனக்கென ஒரு பாதை, வியூகம் அமைத்து, அதில் வெற்றிநடை போட்டு தைரியலட்சுமியாக வலம் வருகிறார்.

