தனுஷ் நடித்திருக்கும் 'வாத்தி' படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது படம் பிப்ரவரி 17ஆம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்திற்காக காத்திருந்த தனுஷின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
ரஜினி நடிப்பில், 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இணைந்துள்ளார். அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில், "நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்த முன்னணி நடிகர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடித்தால் படங்கள் ஒதுக்கப்பட்டுவிடும் என்ற பயப்படுகிறார்கள்," என்று கூறியுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்தது 'வணங்கான்' படம். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படப்பிடிப்பு கடந்த ஐந்து மாதங்களாக நடைபெறவில்லை என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சூர்யா, பாலா இருவருக்கும் இடையே பிரச்சினை என்ற வதந்திகளும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இயக்குநர் பாலா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது அவரிடம் 'வணங்கான்' படம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பட்டும்படாமல், "சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்தின் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்," என்று கூறிவிட்டுச் சென்றது சூர்யா ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

