இளமையாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காகவே பல இளம் நடிகைகள் அழகை மேம்படுத்துவதற்கான அறுவை சிகிச்சைகளை செய்துகொள்கிறார்கள். இதற்கு முன்னணி கதாநாயகர்களும் ஒரு வகையில் காரணம் என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், வயது முதிர்வை எதிர்கொள்ள தாம் அதிகம் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"அனைத்து முன்னணி நாயகர்களும் இளம் நடிகைகளுடன் இணைந்து நடிக்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக வயதாகிவிட்ட நாயகர்களின் தேர்வு இளம் நாயகிகள்தான். அதனால்தான் திரையுலகத்தினர் மத்தியில் அழகுக்கான அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது," என்கிறார் ராதிகா ஆப்தே.
அண்மையில் நடிகை ஷ்ருதிஹாசன் அழகை மேம்படுத்தும் நோக்கில் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். காதல் சந்தியா, அதுல்யா ரவி உள்ளிட்ட மேலும் சிலர் இவ்வாறு சிறப்பு சிகிச்சை பெற்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பெரும் பொருள்செலவில் உருவாகும் வணிக ரீதியிலான படங்களில் இளம் நடிகைகள் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார் ராதிகா ஆப்தே.
"இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில் உங்களிடம் கவர்ச்சி இல்லை, முகம் இளமையாக இல்லை என்றெல்லாம் என் காதுபட சொல்லி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பேச்சுகள் எழும்போது அழகை கூட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது.
"ஓர் அழகான தோற்றம் கொண்டவர் வேண்டும் என்ற தேடுதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
"அந்த தேடுதலுக்கான ஓட்டத்தை இந்தியா மட்டுமன்றி, பரந்துபட்ட உலகம் முழுவதும் காண முடிகிறது. இதற்கு எதிராக நிறைய பெண்கள் போராடி வருகின்றனர்," என்கிறார் ராதிகா ஆப்தே.
'கபாலி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், இப்போது தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.