'குலேபகாவலி', 'ஜாக்பாட்' ஆகிய இரு நகைச்சுவைப் படங்கள் மூலம் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த கல்யாண், அடுத்து இயக்கும் படம் 'கோஸ்டி'.
காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். பேய்க் கதை என்பதால் தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக இருக்கும் என உத்தரவாதம் தருகிறார் கல்யாண்.
தனக்கு அருகே ஒரு பேய் இருப்பதாக நினைத்து, அதை என்ன செய்யலாம் என்று யோசிப்பாராம் நாயகி. ஆனால் அவரைச் சுற்றி ஒரு பேய்க் கூட்டமே இருக்கும். இந்த உண்மை தெரியவரும்போது அதிர்ந்து போவார். இறுதியில் அந்தப் பேய்களிடம் இருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் கதையாம்.
"இது மனநல மருத்துவம் என்பதைப் பின்னணியாக வைத்து திகில், புலனாய்வுப் படமாக உருவாகி உள்ளது," என்கிறார் கல்யாண்.
கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். காஜல் அகர்வால் தாம் எதிர்பார்த்ததைவிட அதிகம் உழைத்ததாகச் சொல்கிறார்.
"காஜலிடம் கதையை விவரித்த அடுத்த நிமிடமே கால்ஷீட் ஒதுக்கிவிட்டார். நான் படப்பிடிப்பின்போது காட்சிகளை வேகமாக எடுத்து முடிப்பது வழக்கம். அதனால் சில சமயங்களில் படப்பிடிப்பு 12 மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கும்.
"காஜலைப் போன்ற பெரிய நாயகிகள் இதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என்று சிலர் கூறினர். ஆனால் காஜல் அதற்கு நேர்மாறானவராக இருந்தார். படப்பிடிப்பின்போது மிகுந்த ஒத்துழைப்பு அளித்தார்.
"அது மட்டுல்ல, அவருக்கு சில சண்டைக் காட்சிகளும் உள்ளன. அதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்தார். காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் அவருக்குக் கச்சிதமாக அமைந்துள்ளது," என்று பாராட்டுகிறார் கல்யாண்.
யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கும் என்று குறிப்பிடுபவர், யோகி மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்பது இப்படம் மூலம் மீண்டும் நிரூபணமாகும் என்கிறார்.
"தமிழ் ரசிகர்கள் எப்போதுமே தரமான பேய்க் கதைகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பார்கள். அதை மனதில் வைத்துதான் இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். எனவே ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குக்கு வரலாம்.
"அனைவருக்கும் முழுமையாக மனநிறைவு தரும் படமாக இருக்கும். மனிதர்கள் சிரிப்பது மிகவும் குறைந்துவிட்டது. இந்தப் படம் நம்மைச் சிரிக்க வைக்கும்," என்கிறார் கல்யாண்.

