எழுத்தாளர் ஜெயமோகனின் 'கைதிகள்' சிறுகதை திரைப்படமாகிறது. 'ரத்தசாட்சி' என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்குகிறார்.
இவர் ஜெயமோகனின் தீவிர வாசகராம். அவரது பல கதைகளைப் படித்தபோது அவற்றையும் திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம்.
"அப்படி ஒரு முறை 'வெண்கடல்' சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது அதிலிருந்த 'கைதிகள்' சிறுகதை என்னைத் தூங்கவிடாமல் செய்தது. நிச்சயமாக அதை திரைப்படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
"ஜெயமோகனை சந்தித்து முறைப்படி கதைக்கான அனுமதியைக் கேட்டேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட தகவல் வியப்பை ஏற்படுத்தியது. காரணம், இதே சிறுகதையை இயக்குநர் மணிரத்னமும் படமாக்க விரும்பினாராம்," என்று வியக்கிறார் ரஃபீக் இஸ்மாயில்.
எனினும் மணிரத்னம் பின்னர் 'பொன்னியின் செல்வன்' பட வேலைகளில் கவனம் செலுத்தியதால் தமது கதையைப் படமாக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயமோகன். மணிரத்னத்துக்காக சுமார் ஓராண்டுகாலம் காத்திருந்த நிலையில், அவர் வராததால் ரஃபீக் இஸ்மாயில் கதைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.
இது நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றிப் பேசும் கதை அல்லவா?
"உண்மைதான். விறுவிறுப்பான அரசியல் களத்துடன் உருவாகிறது. நக்சலைட் இயக்கத்தினர் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என நம்பினர். ஆனால் நாம் கற்பனை செய்யும் மகத்தான உலகத்தை ஆயுதங்களின் துணையோடு உருவாக்க முடியாது என்பதுதான் கதைக்கரு.
"இதை நக்சலைட்டுகளின் வீழ்ச்சி என்று சொல்ல வரவில்லை. கருத்து மாற்றம் ஏற்பட்டபின், அவர்களும்கூட ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் இயக்கத்துக்குள் வந்தனர்.
"ஒரு காலகட்டத்தில் தர்மபுரியில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த அப்பு, பாலன் போன்றவர்கள் அரசாங்கத்தின் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அதே சமயம், அவர்கள் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
"அப்பு, பாலன் இருவருமே வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். ஆனால், ஜெயமோகன் கதையில் அப்பு பாலன் என்பது ஒருவர்தான். அந்தச் சிறுகதையைப் படமாக்கும்போது, உண்மைக் கதையுடன் கற்பனையையும் கலந்துவிட்டோம். நக்சல் இயக்கம் குறித்துப் பேசப்பட்டாலும், இது அனைவருக்குமான படமாக இருக்கும்," என்கிறார் ரஃபீக் இஸ்மாயில்.

