தமக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் தமன்னா. மும்பை தொழிலதிபர்
ஒருவரை தமன்னா
திருமணம் செய்ய இருப்பதாகவும் திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வருவ தாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதை தமன்னாவோ அவரது குடும்பத்தாரோ மறுக்கவில்லை. இதனால் திருமணம் நடப்பது உறுதி என்று ரசிகர்கள் கருதிய நிலையில், இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் தமன்னா. அதில், தனக்கு திருமணம் என்று வெளியான தகவல் வெறும் வதந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள பெண்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்கிறார் ஆண்ட்ரியா. சிறு வயது முதல் தாம் அதுபோன்ற தருணங்களைக் கடந்து வந்துள்ளதாக அவர் கூறுகிறார். "தெருவில் நடந்து செல்லும் போது பின்னால் வந்து என்னை தட்டிவிட்டுச் செல்வார்கள். சில சமயங்களில் எல்லை மீறுவார்கள். கலை நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு நடக்கும். நாம் அதை உணர்வதற்குள் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.
ஆண்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்று நினைக்க வைத்து விடுகிறார்கள். தொடக்கத்திலேயே கண்டித்தால் எல்லை மீறல்கள் இருக்காது," என்கிறார் ஆண்ட்ரியா.
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 'எல்கேஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷங்க' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அவரது படங்கள் வசூல் ரீதியில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியிலும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் உருவாகும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் நடிக்க உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜூங்கா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கோகுல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் கோடைகால பள்ளி விடுமுறையையொட்டி இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகையர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

