சசிகுமார் நாயகனாகவும் விக்ராந்த் வில்லனாகவும் நடிக்கும் படம் 'சிவப்பு'. இது 'கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா உருவாக்கியுள்ள படம்.
"கதையைக் கேட்கத் தொடங்கியதும் ஏதோ வழக்கமான வட்டத்துக்குள் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். ஆனால் படம் முடிந்ததும், 'அட நன்றாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள்" என்கிறார் இயக்குநர்.
வழக்கமான ஒரு குடும்பத் தலைவனின் கதை இது. சராசரி மனிதனான அவன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். அவற்றைச் சமாளித்தால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற இயலும் என்கிற நிலை. அப்போது அந்த சராசரி மனிதன் எப்படிச் செயல்படுகிறான் என்பதை விவரிக்கப் போகிறது 'சிவப்பு' திரைப்படம்.
"சசிகுமார் கால்ஷீட் ஒதுக்கத் தயாரானதும் எனது பொறுப்பு அதிகரித்துவிட்டது. பொதுவாக அவரைப் பற்றி நினைத்தால் ஒரு கிராமத்து தோற்றம் மனதில் தோன்றி மறையும். ஆனால் இதுவரை அவர் செய்யாத, எனக்கும் புதிதாக இருக்கக்கூடிய கதையை, கதைக்களத்தை அமைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அப்போதுதான் 'சிவப்பு' கதை மெருகேற்றப்பட்டது.
"கதைப்படி ஒலிப்பதிவு நிபுணராக திரையில் தோன்றுவார் சசி குமார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் பூமிநாதன். இது சசிகுமாருக்கு கச்சிதமாகப் பொருந்தும் பாத்திரம். ஆனால் அவரது நடை, உடை, பாவனை எல்லாமே வித்தியாசமானதாக இருக்கும்.
"அவரது முந்தைய படங்களில் நிறைய வசனங்கள் பேசுவார், சண்டை போடுவார். ஆனால் இந்தப் படத்தில் அவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன். மேலும் அவர் இதுவரை முழுக்க முழுக்க நகர்ப்புறத்தைப் பின்னணியாகக் கொண்ட கதைகளில் நடித்ததில்லை. அந்த மனக்குறை எல்லாம் 'சிவப்பு' படம் மூலம் முடிவுக்கு வரும்,"என்கிறார் சத்ய சிவா.
இப்படிப்பட்ட கதைக்களம், கதை, கதாபாத்திரத்துக்குள் சசி குமாரை கொண்டு வருவதே தமக்குப் பெரிய வேலையாக இருந்தது என்று சொல்பவர், இது போன்ற சவாலான அனுபவங்களை சசியும் விரும்புவதாகக் கூறுகிறார்.
"ஒலிப்பதிவு குறித்து அனைத்து நுணுக்கங்களும் நன்கு தெரியும் என்றாலும், தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் என்பதால் சென்னை யில் உள்ள சில ஒலிப்பதிவுக் கூடங்களுக்கு நேரில் சென்று அங்கு நடப்பவற்றை குறித்துக் கொண்டார்.
"ஒலிப்பதிவு நிபுணர்களுடன் கலந்து பேசி பல விவரங்களைத் தெரிந்துகொண்டார்," என்று தன் பட நாயகனை பாராட்டுகிறார் சத்ய சிவா.
வில்லன் கதாபாத்திரம் என்பது மிக முக்கியமானது என்று குறிப்பிடுபவர், ஒரு கதையின் வெற்றியானது அதில் எதிர்மறை பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கும் என்கிறார்.
"அந்த வகையில் விக்ராந்த் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்தி ரத்துக்காக கடுமையாக உழைப்பவர்.
"பொதுவாக வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் ஒரு கற்பனை செய்து வந்திருப்போம். அந்த எண்ணம் சரியானது என்பதை நிரூபிக்க வேண்டியது அந்த வில்லனின் (நடிகர்) பொறுப்பு.
"விக்ராந்த் இந்தக் கதைக்குள் நுழைந்ததும் அறவே மாறிவிட்டார். அவரது வில்லத்தனம் அலற வைக்கும்.
"என் படத்தின் வில்லன் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தெரிவார். ஆனால், வில்லனைப் பார்க்கும்போதே நம்மையும் அறியா மல் ஒரு பயம் உண்டாகும். அப்படிப்பட்ட பயத்தை ஏற்படுத்துவார் விக்ராந்த்.
"ஹரிப்ரியா நாயகியாக நடித்துள்ளார். குடும்பத் தலைவியாக வும் ஆறு வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் அவர்தான் உடனடியாக நடிக்க முன்வந்தார்.
"கதைப்படி, நாயகனின் மனைவி யாக நடிப்பவருக்கு ஓரளவு முதிர்ச்சி வேண்டும் என நினைத்தோம். அதற்கு கச்சிதமாகப் பொருந்தி உள்ளார் ஹரிப்ரியா," என்கிறார் சத்ய சிவா.

