விஜய்யின் 'வாரிசு' படத்திற்கு ஆந்திராவில் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகளை ஒதுக்க இயலாது என்று கூறப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையடுத்து தமிழ் இயக்குநர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
தில் ராஜூ தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை பொங்கல் பண்டிக்கையின்போது வெளியிட உள்ளனர். தெலுங்கில் 'வரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியீடு காணும்.
இனி தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் முடிவெடுத்துள்ளது. அதன்படி பார்த்தால், விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது தற்போது ஒதுக்கப்படும் திரையரங்குகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இனி ஒதுக்கப்படும். இதுதான் சிக்கலுக்கும் மோதலுக்கும் வழிவகுத்துள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு திரை யரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது என்றும் இதன் காரணமாகவே தமிழ்ப் படங்களுக்கு கெடுபிடி காட்டப்படுவதாக ஒரு தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நடைபெற்ற 'துடிக்கும் கரங்கள்' என்ற படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ் இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு உள்ளிட்டோர் தெலுங்கு தயாரிப்பாளர்களின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், அஜித்தின் 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரு படங்களுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்துவதாகச் சாடினார்.
ஆனால் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் வெளியாகும்போது இதுபோன்ற நெருக்கடி ஏற்படுவதில்லை என்றும் பேரரசு சுட்டிக்காட்டினார்.
'கே.ஜி.எஃப்', 'பாகுபலி' போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில்தான் திரைகண்டதாக அவர் குறிப்பிட்டார்.
"அண்மையில், 'பொன்னியின் செல்வன்' படத்தைக் கொண்டாடிய நாம், 'காந்தாரா' படத்தின் வெற்றியையும் கொண்டாடத் தவறவில்லை. தமிழர்கள் மட்டுமே பாகுபாடு பார்ப்பதில்லை," என்றார் இயக்குநர் பேரரசு.
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, 'வாரிசு' திரைப்படம் ஆந்திராவில் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு சினிமா 'வாரிசு'க்கு முன், 'வாரிசு'க்கு பின் எனும் நிலையைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
"இது சினிமாவின் பொற்காலம். ஒரு குறிப்பிட்ட மொழியில், மாநிலத்தில் தயாரிக்கப்படும் படத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்களது வீடுகளில் இருந்தபபடி பார்த்து ரசிக்கிறார்கள். இதுபோன்ற காலத்தில் வீண் பிரச்சினைகள் எழவே கூடாது," என்றார் லிங்குசாமி.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் திறமையான படைப்பாளிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைவரும் ஒன்றுகூடி நியாயமான முறையில் பேசி இப்பிரச்சினைக்கு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மிக விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
"ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி, 'ஆர்.ஆர்.ஆர்' படங்கள் தமிழகத்தில் பெரிதாகப் பேசப்படுகிறது. தமிழகத்தில் எடுக்கும் படங்கள் மற்ற மாநிலங்களிலும் வெற்றி பெறுகிறது. இயக்குநர் சங்கரின் எத்தனையோ படங்கள் ஆந்திராவில் வெளிவந்துள்ளன. எனவே, குறுகிய எண்ணத்தோடு செயல்படுபவர்கள், உடனே தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்," என்றார் லிங்குசாமி.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நடிகர்களும் இப்பிரச்சினையில் தலையிட்டு சுமுக தீர்வு காண உதவ வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
, :