ரஜினி நடித்த படங்களின் தலைப்பை புதுப் படைப்புகளுக்கு வைத்தால் அவையும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார்.
விமல் நாயகனாக நடிக்கும் 'துடிக்கும் கரங்கள்' படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியானது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லிங்குசாமி, விமல் மிக இயல்பாக நடிக்கக்கூடிய நாயகன் என்றும் இன்று சிவகார்த்திகேயன் உள்ள இடத்துக்கு விமல் வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
"ரஜினி நடித்த படத்தின் தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்துள்ளனர். ரஜினி படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தும்போது மிகப்பெரிய வெற்றி கிடைக்கிறது. அதற்கு 'நான் மகான் அல்ல' படத்தைக் குறிப்பிடலாம். அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப் படமும் நிச்சயம் பெறும்.
"நடிகர் விமல் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மஞ்சப்பை' என நல்ல படங்களில் நடித்துள்ளவர். சிவகார்த்திகேயன் போன்று விமலும் தனக்குரிய பெரிய இடத்தை இந்நேரம் அடைந்திருக்க வேண்டும்.
"இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டுவிட்டது. இப்போது சின்னப் படங்கள் என்று வகைப்படுத்தப்படும் 'லவ் டுடே' போன்ற படைப்புகள் படம் வெளியான பின்னர் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன.
"இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை பார்த்தபோது சலிப்பு ஏற்படவில்லை. மாறாக, உற்சாகமாக இருந்தது. எனவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும்," என்றார் இயக்குநர் லிங்குசாமி.
'துடிக்கும் கரங்கள்' படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் வேலுதாஸ் பேசும்போது, தாம் நீண்ட காலமாக திரையுலகில் பணியாற்றி வருவதாக வும் தம்மையும் இயக்குநராக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், தயாரிப்பாளர் அண்ணாதுரை இப்படத்தை தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"கதைக்கு ஏற்ற நாயகனாக இருந்ததால் விமலை ஒப்பந்தம் செய்தோம். நான் எதிர்பார்த்ததைவிட அதிக ஒத்துழைப்பை வழங்கினார். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் இந்தப் படம் வெற்றி பெறும். அதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன," என்றார் இயக்குநர் வேலுதாஸ்.
கடந்த சில ஆண்டுகளாக விமலுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் வெற்றிகளும் அமையவில்லை.
இடையில் சொந்தப் படம் தயாரிக்க முற்பட்டு சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
இப்போது நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து, அவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'துடிக்கும் கரங்கள்' படம் தனக்கு நல்ல திருப்புமுனையைத் தரும் என எதிர்பார்க்கிறாராம்.
படத்துக்கான விளம்பர நட வடிக்கைகளை சிறப்பாகச் செய்ய தயாரிப்புத் தரப்பு முன்வந்திருப்ப தாகத் தகவல். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகே அடுத்த கட்ட நகர்வுகளை முடிவு செய்ய இருக்கிறார் விமல்.
'துடிக்கும் கரங்கள்' படம் விரைவில் திரைகாண உள்ளது.

