நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அண்மையில் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில் வருகிற 28ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். இதையொட்டி சென்னையில் நேற்று செய்தியாளர்களை இருவரும் சந்தித்தனர்.
கவுதம் பேசும்போது, "தேவராட்டம் படத்தில் நடித்தபோது நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
"நான்தான் முதலில் காதலைச் சொன்னேன். சொல்லிவிட்டு இரண்டு நாள்கள் பயந்துகொண்டே இருந்தேன். வீட்டில் சொன்னபோது ஏற்றுக்கொண்டார்கள்.
"மஞ்சிமா உன்னை
நன்றாகப் பார்த்துக்கொள்வார். உன்னை நல்லவனாக மாற்றிவிட்டார்," என்று அப்பா சொன்னார். இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ள நடக்கிறது.
"உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. தேனிலவு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது சிம்புவுடன் 'பத்து தல' படத்தில் நடிக்கிறேன். என் திருமணச் செய்தி கேட்டு சிம்பு வாழ்த்தினார்," என்றார்.

