'சூரரைப்போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் அப்படத்தை மறுபதிப்பு செய்து வருகிறார். 'சூரரைப்போற்று' படம் பல விருதுகளைப் பெற்றது. அப்படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய தொழில் அதிபரான ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க இருக்கிறார். அந்தப் படத்தையும் சூர்யாதான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அப்படத்தில் நடிப்பதற்கு சூர்யா, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரின் பெயர்களையும் சுதா பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் நடிகர் விஜய் பனையூரில் இருக்கும் அவருடைய மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்களைச் சந்தித்து 'வாரிசு' படத்தின் வெளியீடு பற்றி கலந்து ஆலோனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற காட்சி காணொளியாக வெளிவந்தது. அந்தக் காணொளியில் விஜய் சென்ற காரின் கண்ணாடியில் கறுப்பு நிற ஒட்டுத்தாள் ஒட்டி இருந்ததைக் கண்ட பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் உடனடியாக விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணு விஷால், "கணவன் மனைவிக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகள் பற்றி இந்தப் படத்தில் பேசப்பட்டிருக்கும். தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களைவிட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகின்றன. 'ரெட் ஜெயண்ட் நிறுவனம்' அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மையில்லை. தமிழ்ப் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளைக் கொடுப்பதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது," என்று பேசினார்.

