தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்கள் பலரும் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்குகின்றனர்.
எனவே, அபிமான நாயகர்கள் தற்போது நடித்து வரும் படம் குறித்த அண்மைத் தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் அறுபது விழுக்காடு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சென்னையில் சிறைச்சாலை போன்ற அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
மிக விரைவில் இறுதிக்காட்சியைப் படமாக்க ஹைதராபாத் செல்லப் போகிறார்களாம். இந்தப் படத்தை முழுமையாக முடித்த பிறகே தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
கமல்ஹாசன் 'விக்ரம்' படத்துக்குப் பிறகு ஏற்கெனவே பாதியில் நின்றுபோன 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்திலும் அடுத்து நடிக்க உள்ளார். தனது படத்தில் ரஜினி, கமல் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சி மேற்கொண்டாராம்.
ஆனால் எடுத்த எடுப்பிலேயே ரஜினி இதற்கு மறுத்துவிட்டதாகத் தகவல். உதயநிதி நடிக்கும் படமொன்றை தயாரிக்கவும் உள்ளார் கமல். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' பட வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது இப்படம்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 'மாஸ்டர்' படம் வந்துள்ளது.
அஜித்குமார் அடுத்து ஹெச்.வினோத் இயக்கும் 'துணிவு' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள். அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.
பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடிக்கிறார். இது கோலார் தங்க வயல் பகுதியை பின்புலமாக வைத்து உருவாகி உள்ள கதையாம்.
சூர்யா கடந்த சில மாதங்களாக இயக்குநர் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்தார். இப்போது சிவா இயக்கும் படத்திலும் நடிக்கிறார். 'வாடிவாசல்' படமும் கைவசம் உள்ளது. எல்லாம் வரிசையாக வெளியாகும்.
கார்த்தி 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களுக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 25வது படம். 'ஜப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அடுத்து 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறாராம்.
வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்திலும் நடிக்கிறார் விஷால். ஜெயம் ரவி அடுத்து ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். தனுஷ், தமிழ், தெலுங்கில் தயாராகும் 'வாத்தி' படத்தை முடித்துவிட்டு இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் 'மண்டேலா' படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே, தயாரிப்புச் செலவைக் குறைப்பதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு படத்துக்காக படப்பிடிப்பு நடக்கும் நாள்கள் சில கதாநாயகர்களின் ஒத்துழைப்பின்மையால் அதிகரிக்கிறது என்றும் இதன் காரணமாக பொருள் செலவு ஏற்படுகிறது என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தில் மேலும் சில காட்சிகளை இணைக்கத் திட்டமிட்டு, அதில் நடித்த கலை ஞர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் மணிரத்னம்.
தனது மகன் துருவ் அறிமுகமான படம் தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் இருந்தார் விக்ரம். இந்நிலையில், முன்பு பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இயக்குநரைச் சந்தித்தாராம். அப்போது அவர் சொன்ன கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனினும் அப்போதே அந்தக் கதையை படமாக்கும் சூழல் அமையவில்லை. இந்நிலையில், அண்மை யில் அந்த இயக்குநரை மீண்டும் சந்தித்தபோது, அதே கதை குறித்து மீண்டும் விவாதித்துள்ளனர். இதையடுத்து அந்தக் கதையில் துருவ் நாயகனாக நடிக்க, விக்ரமே தயாரிக்க உள்ளார்.
, :

