'வாரிசு' படத்தில் சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, தனது சம்பளத்தை அவர் கணிசமாக உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில வெற்றிகளுக்குப் பிறகு கதாநாயகர்கள் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம்தான். எனினும், சிம்பு தொடர்ந்து மூன்றாவது முறையாக அதைச் செய்துள்ளார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் சலசலப்பு ஏற்படக் காரணம்.
'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களைத் தந்துள்ளார் சிம்பு. தற்போது அவர் நடித்து வரும் 'பத்து தல' படம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தமிழ் மட்டுமல்லாமல், பிற மொழிகளிலும் இந்த படத்துக்கான வியாபாரம் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' படங்களின் வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய சிம்பு, 'பத்து தல' படம் வெளியாகும் முன்பே மீண்டும் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
இது குறித்து சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால், சிம்பு ஆதரவாளர்களோ, அவரது முடிவில் தவறேதும் இல்லை என்கிறார்கள்.
"தயாரிப்பாளர்களுக்கு முதலீடு செய்ததைவிட, இரு மடங்கு லாபத்தைப் பெற்றுத்தரும் நடிகர், தன் சம்பளத்தை உயர்த்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? தொடர்ந்து ஊதியத்தை உயர்த்துகிறார் என்றால், தொடர் வெற்றிகளைத் தருகிறார் என்றுதானே அர்த்தம்," என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் போன்ற அடுத்த வரிசை கதாநாயகர்களும் இனி படங்களின் வெற்றி தோல்விகளுக்கு ஏற்ப தங்களுடைய சம்பளத்தை கூட்டி, குறைப்பது என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
'லவ் டுடே' படத்தில் நடித்துள்ள பிரதீப், ஆர்.ஜே.பாலாஜி, விஷ்ணு விஷால், அருண் விஜய் உட்பட இளம் நடிகர்கள் பலரும் இந்த வழியைப் பின்பற்றுவது என முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள் கோடம்பாக்க விவரப்புள்ளிகள்.
, :
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி.

