'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு சில படங்களில் நாயகனாக நடித்த ஆரவ், தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவான 'கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார்.
நாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இணையாக தமக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார் ஆரவ்.
'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, திடீரென வில்லனாக நடிக்க சம்மதித்தது எப்படி என்று கேட்டால், ஆரவ்வின் முதல் பதில், முகம் கொள்ளாத புன்னகையாகத்தான் இருக்கிறது.
"நடிகனாக வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா துறைக்கு வந்தேன். அது வில்லனாக இருந்தாலும் சரி, குணச்சித்திர பாத்திரமாக இருந்தாலும் சரி, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
"அதாவது, வாய்ப்பு கிடைத்தால் அதுவே போதும் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி. அந்த ஆசைக்கு மேலதிகமாகக் கிடைத்தது எல்லாம் நான் சற்றும் எதிர்பாராதவை. நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை.
"எனினும் அதற்கான வாய்ப்புகள் அமைந்தபோது, அதற்கேற்ப என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.
"உண்மையைச் சொல்வதானால், நாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோதே வில்லனாக நடிக்க முடியுமா என்று சிலர் கேட்டனர். எனக்கும் அவ்வாறு நடிப்பதில் விருப்பம் இருந்தது. எனினும் சரியான இயக்குநர் படத்தில், சரியான கதையில் நடிக்கவேண்டும் எனக் காத்திருந்தேன்," என்கிறார் ஆரவ்.
திடீரென ஒருநாள் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்து தொடர்புகொண்டு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இயலுமா எனக் கேட்டனராம். மகிழ் திருமேனி, உதயநிதி கூட்டணி என்றதும் எந்தவித தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டாராம்.
"இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு எதிராக வில்லனும் சமமாக இருந்தால்தான் கதைக்குப் பலமாக இருக்கும் என உதய் அண்ணனும் நினைத்தார். மகிழ் திருமேனியையே நடிக்க வைக்கலாம் என்றுகூட யோசித்தாராம். பிறகு என்னைத் தேர்வு செய்தனர்.
"இப்போது படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பும் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளும் உற்சாகம் அளிக்கின்றன. இதற்காக இயக்குநருக்கும் உதய் அண்ணனின் பெருந்தன்மைக்கும் நன்றி. தொடர்ந்து வில்ல னாக நடிப்பேன்," என்கிறார் ஆரவ்.

